புற்றுநோயால் பாதிப்பு: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

Microsoft co-founder Paul Allen passed away

by Isaivaani, Oct 16, 2018, 07:54 AM IST

உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் (65). அமெரிக்காவின் தொழிலதிபரும், முதலீட்டாளரும், அறப்பணியாளருமான இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக, இன்று பால் ஆலன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சியாட் நகரில் பிறந்தவர் பால் ஆலன். கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்ட பால் ஆலன், தனது 14வது வயதில் லேக்சைடு பள்ளியில் படிக்கும்போது தன்னை போலவே கணினியில் ஆர்வம் கொண்டிருந்த 12 வயது பில்கேட்ஸை சந்தித்தார்.

இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கணினிக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இருவரும் இறங்கினர்.

பின்னர் இருவரது உழைப்பினாலும், திறமையினாலும் மென்பொருளைக் கண்டறிந்தனர். அது உலகம் முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983ம் ஆண்டு வரை இருந்தார் பால் ஆலன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐடியா மேன், மேன் ஆப் ஆக்ஷன் என்று பால் ஆலன் செல்லமாக அழைக்கப்படுவார்.

30 வயதிலேயே கோட்டீஸ்வரனான பால் ஆலனுக்கு திடீரென புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால், நிறுவனத்தில் இருந்து விலகி புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார். புற்றுநோய் குணமாகிய நிலையில், வல்கன் வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், பால் ஆலனுக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் நிறுவனத்தில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தை கொண்டு உலகம் முழுவதும் பல நற்பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில், புற்றுநோய் தீவிரமடைந்ததை அடுத்து, இதன் காரணமாக பால் ஆலன் இன்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா மற்றும பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading புற்றுநோயால் பாதிப்பு: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை