அமெரிக்காவிடம் மோடி உதவி கேட்கவில்லை டிரம்புக்கு மத்திய அமைச்சர் மறுப்பு

No such request made by PM Modi, says foreign minister S Jaishankar on Trumps Kashmir mediation claim

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும். இதில் அமெரிக்காவிடம் மோடி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவி்த்துள்ளார்.

பாகிஸ்தான் பிரமதர் இம்ரான்கான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை நேற்று(ஜூலை22) சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவ வேண்டுமென்று டிரம்ப்பிடம் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த டிரம்ப், ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன் இந்திய பிரதமர் மோடியும் இதே போல் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே, காஷ்மீர் விவகாரத்தில் என்னால் உதவ முடியும் என்றால், நான் மத்தியஸ்தராக செயல்படுவதற்கு விரும்புகிறேன்’’ என்று கூறினார்.

ஆனால், டிரம்ப்பின் இந்த பேட்டிக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும். இதில் அமெரிக்காவிடம் மோடி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. பாகிஸ்தானுடன் எந்தப் பிரச்னைக்கும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இருநாடுகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காண முடியும். இதில் வேறு யாரும் தலையிடுவதை இந்தியா ஏற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டால் மட்டுமே காஷ்மீர் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தலையிட்டு உதவ முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை இன்று விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்கினால் மட்டுமே எந்த பேச்சுவார்த்தையிலும் பலன் கிடைக்கும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஒரு வழியாக முகம் மலர்ந்த மோடி, இம்ரான் கான்... கை குலுக்கி வாழ்த்தும் பரிமாறினர்

You'r reading அமெரிக்காவிடம் மோடி உதவி கேட்கவில்லை டிரம்புக்கு மத்திய அமைச்சர் மறுப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்றத்தில் வைகோ; வசைபாடிய சுவாமி வாழ்த்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்