திருவனந்தபுரம்: கேரளாவில், வேடிக்கை காட்டிக் கொண்டே உணவு அளித்தபோது பாகனின் கையை கடித்து யானை துண்டாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் யானைகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, கோவில்களிலும், வீடுகளிலும் யானை வளர்க்க உரிமை பெற்று யானைகளை பராமரித்தும், வளர்த்தும் வருகின்றனர்.
இந்த யானைகளை பராமரிக்க பாகன்களை நியமித்துள்ளனர். இவர்கள், யானைக்கு குளிப்பாட்டுவது முதல் உணவு வழங்குவது வரை அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வார்கள். இதனால், பாகன்களின் சொல்லுக்கு யானைகள் கட்டுப்படும்.
ஆனால், யானைகள் பாகன்களுக்கு எதிராக நடந்துக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில் தான், பாக¬னின் கையை யானை கடித்து துண்டான சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆலப்புழா கஞ்சிக்குழி பகுதுயை சேர்ந்த பிரதாபன்(52) என்பவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு தனியாருக்கு சொந்தமான யானைக்கு பாகனாக உள்ளார். இந்த யானையை கோவில் விழா, மரக்கட்டைகளை தூக்கும் உள்ளிட்ட பணிகளுக்கும் அழைத்து செல்வார்.
இந்நிலையில், இவரது வீட்டுக்கு உறவினர் பெண் ஒருவர் வந்திருந்தார். யானையை வேடிக்கை காட்டுவதற்காக அந்த பெண்ணை யானையின் அருகே அழைத்துச் சென்றார். மேலும், யானைக்கு உணவு கொடுத்தார். பழத்தில் மருந்து வைத்து அதை யானையின் வாய்க்குள் பிரதாபன் வைத்தபோது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் யானை அவரது கையை கடித்து விட்டது. கை யானையின் வாயில் சிக்கிக் கொண்டதால் அவர் வலியால் துடிதுடித்து போனார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாமல் திணறினர். பின்னர், பொது மக்கள் யானையின் பிடியில் இருந்து பாகனை மீட்டனர். இதில், பாகனின் வலது கை துண்டானது. உடனடியாக பாகனை மீட்டெடுத்த மக்கள் அவரை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யானை கடித்து துண்டான கையை உடலுடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.