இந்தியாவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது தென் ஆப்பிரிக்கா!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

Feb 5, 2018, 13:24 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா 23 ரன்களும், குவிண்டன் டி காக் 20 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அதன் பின்னர் கேப்டன் மார்க்ரம் 8 ரன்னிலும், டேவிட் மில்லர் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேறினர். இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 54 ரன்களுக்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் டுமினி மற்றும் கயா ஜோண்டா இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஜோண்டா, டுமினி இருவரும் தலா 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேற 32.2 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. கடைசி 19 ரன்களில் ஐந்து விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். புவனேஷ்குமார், ஜாஸ்பிரிட் பும்ரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 15 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான், விராட் கோலி இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஷிகர் தவான் அரைச்சதம் விளாசினார்.

20.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஷிகர் தவான் 51 ரன்களும் [9 பவுண்டரிகள்], விராட் கோலி 46 ரன்களும் [4 பவுண்டரிகள்] எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

You'r reading இந்தியாவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது தென் ஆப்பிரிக்கா! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை