உத்தரகண்ட் மாநில பாஜக முதல்வர், கடந்த 9 மாதங்களில் 68 லட்சம் ரூபாய்க்கு டீ, பக்கோடா சாப்பிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஹேமந்த் சிங் என்பவருக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த பதிலில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநில முதல்வராக, பாஜக-வைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத், கடந்த 2016 மார்ச் 18-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது, அரசின் செலவுகளைக் குறைக்கப் போவதாகவும், அரசு நிகழ்ச்சிகள் இனிமேல், அதிக செலவு ஏற்படும் வகையில் ஹோட்டல்களில் நடத்தப்படாது என்றும் கூறினார். இதனால் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சிக்கனமானவர் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஹேமந்த் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின், டீ, ஸ்நாக்ஸ் செலவுக் கணக்கை கேட்டிருந்தார். அதற்கு, அரசின் கூடுதல் செயலாளர் வினோத் ரத்தூரியிடமிருந்து பதில் கடிதம் சென்றுள்ளது.
அதில் “கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸூக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ரூ. 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 செலவு செய்துள்ளார்; ராவத், டீ மற்றும் ஸ்நாக்ஸூக்கு மட்டும் தினமும் ரூ. 22 ஆயிரம் செலவு செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்திதான் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஏற்கமுடியாது என்று முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.
முன்னதாக உத்தரகண்ட்டில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹரீஷ்ராவத் முதல்வராக இருந்தபோது, 2014 பிப்ரவரி முதல் 2016 ஜூலைமாதம் வரை டீ மற்றும் ஸ்நாக்ஸூக்கு ரூ. 1.5 கோடி செலவு செய்த விவரம், இதேபோல தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்தது.
அப்போது, இதையெல்லாம் சுட்டிக்காட்டித்தான், சிக்கனமாக இருப்பேன் என்று திரிவேந்திர சிங் ராவத் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவரும் 10 மாதத்திற்குள் 68 லட்ச ரூபாய்க்கு டீ, பக்கோடா சாப்பிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.