‘ஜெய் ராம்’ சுலோகம் கூற சொல்லி 50 வயது முஸ்லிம் முதியவரை 18 வயது இளைஞர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், சிறுபான்மை இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெய்ப்பூர் அருகே இஸ்லாமிய முதியவர் ஒருவரை, இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த இளைஞர், மிக மோசமாக தாக்கிய சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினய் மீனா என்ற, 18 வயதேயான அந்த இளைஞர், சுமார் 50 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய முதியவரிடம் ‘ஜெய் ராம்’ என்ற சுலோகத்தை கூறுமாறு கட்டாயப்படுத்தி, 25 முறை மிகக் கொடூரமான முறையில் கன்னத்தில் அறைவது, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
மூன்று நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. பார்ப்பவர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையிலான இந்த வீடியோவை வினய் மீனாவே, தனது முகநூலில் மிகுந்த துணிச்சலுடன் பதிவேற்றம் செய்து, எல்லோருக்கும் அனுப்பியுள்ளார்.
இது ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியப் பிரச்சனையாக மாறியது. சம்பவம் நடந்த சிரோஷி நகரில், இஸ்லாமியர்கள் போராட்டத்தை துவங்கினர். இதேபோல மதவெறிக்கு எதிரான அமைப்புக்களும் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து, இளைஞர் வினய் மீனாவை, போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.