முன்பதிவுப் பெட்டி பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் 2 மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கப்படுவதாக, அதிர்ச்சி அளிக்கும் தகவலை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
உலகில் மிகப்பெரிய ரயில்வேயாக, இந்திய ரயில்வே துறை இருக்கிறது. ஆண்டுதோறும் தனி பட்ஜெட் போடும் அளவிற்கு, ரயில்வே துறை முக்கியமானதாக இருந்தது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிவந்தபின் தனி பட்ஜெட் நடைமுறையை காலி செய்து, அதை பொது பட்ஜெட்டுடன் இணைத்து விட்டது.
அது ஒருபுறம் இருக்க ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போருக்கு தலையணை, போர்வை அளிக்கப்படுவது வழக்கம். இதில் அண்மைக்காலமாக சரியான பராமரிப்பு பணிகள் இல்லை என்று புகார் எழுந்தது. பலர் ரயில்வே துறையின் இணைய தளத்தில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ரயில்வே பயணிகளுக்கான வசதிக் குறைபாடு பிரச்சனையில் மத்திய கணக்குத் தணிக்கைத்துறை (சிஏஜி) தலையிட்டது. ரயில் பயணிகளின் புகார்கள் மீது என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்று ரயில்வே துறைக்கு கேள்விகளை எழுப்பியது. மேலும் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலையணை, போர்வை சலவை செய்யப்படுகிறது? என்றும் கேட்டிருந்தது.
இதற்கு ரயில்வே துறை, நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் “ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னும் தலையணை உறைகளும், போர்வைகளும் துவைக்கப்பட வேண்டும்; ஆனால் தற்போது போர்வைகள் 2 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுகின்றன; தினமும் அதை மாற்றுவது இல்லை” என்று கூறியுள்ளது.