மின்வாரிய தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு பேச வேண்டும்: சிபிஐ(எம்) வலியுறுத்தல்.

Feb 12, 2018, 20:24 PM IST

மின்வாரிய தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாக தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்துப்பேச வேண்டும் என  தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சிபிஐ (எம்) மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மின்வாரிய தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் நடைமுறைபடுத்தப்பட்டிருக்க வேண்டிய புதிய ஊதிய விகிதம் இன்று வரையிலும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. நிலுவைத்தொகை மறுப்பதற்கான உத்தியாகவே திட்டமிட்டு காலதாமதத்தை மின்வாரியமும் அரசும் ஏற்படுத்தி வருகின்றன.

இரண்டாண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் ஏறத்தாழ ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவிருப்பதாக தொழிற்சங்கங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அமைச்சரும், அரசும், தொழிலாளர் நலத்துறையும் கண்ணாமூச்சியாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்தான், சிஐடியுவுடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் 16.2.2018 வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஜனவரி மாதத்திலேயே வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை உருப்படியான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாகவே தெரியவில்லை.

வருடக்கணக்காக தொழிலாளர்களின் பொறுமையை சோதிப்பதும், வேலைநிறுத்தம் செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என திசை திருப்ப முயற்சிப்பதும் நியாயமான அணுகுமுறை அல்ல. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மின்வாரிய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

எனவே, மின்சார வாரியமும், தமிழக அரசும் உடனடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தி அமல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading மின்வாரிய தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழக அரசு பேச வேண்டும்: சிபிஐ(எம்) வலியுறுத்தல். Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை