இந்தியாவின் பணக்கார முதல்வராக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஏழை முதல்வராக திரிபுராவின் மாணிக் சர்க்காரும் உள்ளனர்.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு இந்தியாவின் 31 மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. 31 முதல்வர்களில், 25 முதல்வர்களின் சொத்து மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
அதில், ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ரூ. 177 கோடி மதிப்பிலான சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
31 முதல்வர்களில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் கடைசி இடத்தில் உள்ளார். அவருடைய சொத்தின் மதிப்பு வெறும் ரூ. 26 லட்சம் மட்டுமே உள்ளது.
குறைவான சொத்துகளுடைய முதல்வர்களில் மாணிக் சர்க்காரைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (சொத்து மதிப்பு ரூ. 30.45 லட்சம்), காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி (சொத்து மதிப்பு ரூ. 55.96 லட்சம்) ஆகியோர் உள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 7.8 கோடி சொத்துக்களுடன் 12-ஆவது இடத்திலும், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி ரூ. 9.6 கோடி சொத்துக்களுடன் 9-ஆவது இடத்திலும் உள்ளனர்.
கல்வித்தகுதி வாரியாக 39 சதவீத முதல்வர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடனும், 32 39 சதவீத முதல்வர்கள் ஏதேனும் ஒரு தொழில் நடத்திக்கொண்டிருப்பதாகவும், 16 சதவீத முதல்வர்கள் முதுகலை பட்டம் பெற்றவர்களாகவும், 10 சதவீத முதல்வர்கள் உயர்நிலை படிப்பை முடித்தவர்களாகவும் உள்ளனர். ஒரே ஒரு முதல்வர் மட்டும் [சிக்கிம் முதல்வர் பிகே சாம்லிங்] டாக்டர் பட்டம் பெற்றவராக உள்ளார்.