லக்னோ: காதலர் தினத்தன்று உள்ளே காலடி வைக்கக்கூடாது என மாணவர்களுக்கு கட் அண்ட் ரைட்டாக லக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காதலர் தனத்தன்று இளைஞர்களும், இளைஞிகளும் தங்களின் காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் தங்களின் காதலை கொண்டாடும் இந்த தினத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில், காதல் தினத்தை முன்னிட்டு பல்கலை வளாகத்திற்குள் மாணவர்களுக்கு அனுமதி மறுத்து லக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மாணவர்கள் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்பும் நடைபெறாது. பிராக்டிகல் மற்றும் கலைநிகழ்ச்சி மட்டுமே நடைபெறும். அதனால், மற்ற மாணவர்கள் யாரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாளை வரக்கூடாது.
மாணவர்களின் பெற்றோரும் அவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பக்கூடாது. இதை மீறி, பல்கலை வளாகத்திற்குள் அமர்ந்திருந்தாலோ, நடனமாடி காதலர் தினத்தை கொண்டாடினாலோ அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.