ஒரே நாளில் கதவை மூடிய கம்பெனி - மூடுவது தெரியாமல் பணிபுரிந்த இரவு நேர ஊழியர்கள்

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள டாங்சங் ஆட்டோமோட்டிவ் கம்பெனி 113 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி இழுத்து மூடியுள்ளது.

by Nabil, Mar 25, 2018, 10:05 AM IST

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள டாங்சங் ஆட்டோமோட்டிவ் கம்பெனி 113 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி இழுத்து மூடியுள்ளது.

மார்ச் மாதம் 13ஆம் தேதி அன்று டாங்சன் ஆட்டோமோட்டிவ் தொழிலாளர்களுக்கு அதிபயங்கர அதிர்ச்சி கிடைத்தது. கம்பெனியின் கதவுகள் மூடப்பட்டன. தொழிலாளர்களின் வேலை முடிவுக்கு வந்துவிட்டது என்று நோட்டீஸ் கதவில் ஒட்டப்பட்டது.

ஹ்வாஷின் (Hwashin) ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தங்களின் ஒரே வாடிக்கையாளர் பொருட்களை வாங்கிக்கொள்வதற்கான ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டதாகவும், மேலும் புதிய ஆர்டர்களை அளிக்கவில்லை என்றும் அந்த நோட்டீசில் காரணம் சொல்லப்பட்டிருந்தது.

எனவே, உடனடி ஆள் குறைப்புக்கு ஆளானவர்கள் போல தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வேலைநீக்க உத்தரவும், அத்துடன் பாக்கிகளும் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் நோட்டீஸ் சொன்னது.

இதில் கொடுமை என்னவென்றால், 13ஆம் தேதி அதிகாலை வரையில் எந்த விவரமும் தெரியாமல் தொழிலாளர்கள் இரவுப் பணி முடியும் வரை வேலை செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள். ஒரே இரவில் அவர்களின் 11 ஆண்டு உழைப்பும் தொலைந்து போய்விட்டிருந்திருக்கிறது.

இந்த சதியின் அடுத்த கட்டம் மார்ச் 18 ஞாயிறு அரங்கேறியது. டாங்சன் ஆலையின் 13 யந்திரங்களையும் கருவிகளையும் ஹ்வாசின் ஆட்டோமோட்டிவ் கையகப்படுத்திக்கொண்டது. கொடுக்கப்படாத கடன்களின் நிமித்தம் மேற்படி சொத்துகள் கைப்பற்றப்பட்டதாக அறிவித்தனர்.

மார்ச் 16 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றைப் பெற்ற ஹ்வாஷின், காவல்துறையின் பாதுகாப்புடன், தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த யந்திரங்களையும் கருவிகளையும் எடுத்துச் சென்றது. அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தத் தொழிலாளர்கள் காவல்துறையின் விளக்கம் கேட்டு வாசலில் திரண்டனர். ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவு நகலை அளித்த காவல்துறை உடனடியாகக் கலைந்துசெல்ல வேண்டும் என்றது. வேறுவழியின்றி தொழிலாளர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஒரே நாளில் கதவை மூடிய கம்பெனி - மூடுவது தெரியாமல் பணிபுரிந்த இரவு நேர ஊழியர்கள் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை