உலகில் அழிவே இல்லாததாகக் கருதப்பட்ட ‘ப்ளாஸ்டிக்’ விரைவில் தன் அழிவுகாலத்தை சந்திக்க உள்ளது.
இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது தவிர்க்க முடியா பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது. இத்தகைய சூழலில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் தவிர்க்க முடியா மற்றும் அழிக்க முடியா அம்சமாக இருப்பது ‘ப்ளாஸ்டிக்’.
ப்ளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் மக்காத ஒரு பொருள் என்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ப்ளாஸ்டிக் பொருள்களை எரித்தாலும் கேடு புதைத்தாலும் கேடு என்ற சூழலில் அழிவின் துவக்கத்தைக்கூட அறியாமல் சீர்கேடுகளின் முதல் தலைவனாக நின்றது ‘ப்ளாஸ்டிக்’.
இத்தகைய நேரத்தில், கடந்த 2016-ம் ஆண்டு ஜப்பானின் ஒரு ஆராய்ச்சில் ஒரு அதிசயத்தக்க முடிவு கிடைத்தது. ஜப்பானின் குப்பைக் கிடங்கில் ஜப்பான் ஆராய்ச்சியாளர்களால் ஒரு புது வகை கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிருமி ப்ளாஸ்டிக்கை உண்டு கழிக்கும் திறன் கொண்டது என்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து இது தொடர்பாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தற்போது ஜப்பான் குப்பைக் கிடங்கில் எதார்த்தமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிருமிக்கு ப்ளாஸ்டிக் பொருள்களை உண்ணும் ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ப்ளாஸ்டிக்கை அழிக்கும் ஆற்றல் கொண்ட கிருமி சர்வதேச சுற்றுச்சூழல் பிரச்னைக்குக் கிடைத்த வரமாகவே சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.