குறைந்து வரும் பால் பயன்பாடு, அதிகரிக்கும் உற்பத்தி, குறையும் சந்தை விலை, கூடும் உற்பத்தி செலவு ஆகியவற்றால் அமெரிக்காவில் பால் உற்பத்தி தொழில் நசிந்து வருகிறது.
"1975-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் தனி நபர் ஒருவர் வழக்கமாக பருகும் பாலின் அளவில் ஏறக்குறைய 42 லிட்டர் குறைந்தது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தனிநபர் பயன்பாட்டில் மேலும் 11 லிட்டர் குறைந்துள்ளது. ஆனால், அமெரிக்க பால் பண்ணைகள் ஒவ்வொரு ஆண்டும், கடந்த ஆண்டை காட்டிலும் 350 மில்லியன் காலன் (ஒரு காலன் கிட்டத்தட்ட 3.75 லிட்டருக்கு சமம்) அதிகமாக பாலை உற்பத்தி செய்கின்றன," என்கிறார் டீன் புட்ஸ் நிறுவன செய்திதொடர்பாளர் ரீஸ் ஸ்மித்.
நியூயார்க்கில் செயல்பட்டு வரும் மையர்ஸ் செஞ்சூரி பார்ம்ஸ் 1837 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதுபோன்று பாரம்பரியமாக பால் பண்ணை நடத்தி வரும் குடும்பங்கள் தற்போதைய சூழலை எதிர்கொள்ள இயலாமல் திகைக்கின்றன. மையர்ஸ் செஞ்சூரி பண்ணையை ஏழாம் தலைமுறையாக ரியானே எர்லின் ஓவன்ஸ் கவனித்து வருகிறார். இந்த 24 வயது இளம்பெண், முறையாக பதிவு பெற்ற நர்ஸ் ஆவார். இரு ஆண்டுகள் தாதியாக பணி செய்து விட்டு, மீண்டும் பண்ணை தொழிலுக்கே திரும்பி விட்டார். அந்த அளவு தலைமுறை தலைமுறையாக இத்தொழில் மக்களின் இரத்தத்தில் ஊறி உள்ளது.
தற்போது பேரங்காடிகளின் தொகுப்பான வால்மார்ட், தன் விற்பனைக்கான பாலை சொந்த பண்ணையிலேயே உற்பத்தி செய்து கொள்ள முடிவு செய்துள்ளது. ஆகவே, டீன் புட்ஸ், இண்டியானா, ஓஹியோ, பென்சில்வேனியா, நியூயார்க், கென்டக்கி, டென்னஸி, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா ஆகிய எட்டு மாநிலங்களில் 100 பண்ணையாளர்களுடனான ஒப்பந்தத்தை வரும் மே 31-ம் தேதி முடித்துக் கொள்கிறது. இத்தகவல் பண்ணையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நியூயார்க் பகுதி பண்ணைகள் வால்மார்ட்டின் முடிவால் நேரடி பாதிப்பு அடைந்துள்ளார்கள்.