ஹவாயிலிருந்து கலிபோர்னியா வரை பரந்திருக்கும் பசிபிக் பெருங்கடல் குப்பையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி பிளாஸ்டிக் துண்டுகள் இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரும் பிளாஸ்டிக் குப்பை மேடு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 1997-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு லட்சத்து பதினேழாயிரம் சதுர மைல் பரப்புக்கு 79 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பை சேர்ந்துள்ளது. இது பிரான்ஸ் தேசத்தின் இருமடங்கை விட அதிகமான பரப்பாகும்.
இக்குப்பையின் பெரும்பகுதி, கைவிடப்பட்ட குறிப்பாக சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களாகும். உலகில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 90 சதவீதம், இதுவரை மறுசுழற்சி செய்யப்படவில்லை. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஆன பாட்டில்கள், நாப்கின்கன் போன்றவை சிதைவதற்கு 450 ஆண்டு காலத்திற்கு மேலாகும். எப்போதோ தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துண்டு ஏதோ ஒரு வடிவில் எங்கோ ஓரிடத்தில் நிலப்பரப்பை மூடிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக், பெருங்கடல்களுக்குள் கொட்டப்படுகின்றன என்று அமெரிக்காவை சேர்ந்த பிளாஸ்டிக் ஓசன்ஸ் பவுண்டேஷன் கூறுகிறது. கடலுக்குள் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கடல் வாழ் உயிரினங்கள், உணவு என்று எண்ணி சாப்பிட்டு, விக்கி அல்லது செரிமானமாகாமல் உயிரிழக்கின்றன. ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் சீல்கள் பிளாஸ்டிக் குப்பையின் மூலம் கொல்லப்படுகின்றன.
பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்கான இராட்சத சுத்திகரிப்பு அமைப்பினை உருவாக்கும் எண்ணம் முதலாவதாக டச்சு நாட்டைச் சேர்ந்த போயன் ஸ்லாட் என்ற இளைஞருக்கு உதித்தது. ஸ்லாட்டுக்கு தற்போது 23 வயது. 16 வயதில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, கிரீஸ் நாட்டில் கடலில் நீந்தியபோது, கடலுக்கடியில் மீன்களை விட அதிகம் பிளாஸ்டிக் பைகளை கண்டது அவர் மனதில் பதிந்தது. தொடர்ந்து அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த ஸ்லாட், 18 வயதானபோது, பல்கலைக்கழக படிப்பை பாதியில் விட்டு விட்டு, பெருங்கடலை சுத்தப்படுத்தும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
"பிளாஸ்டிக் குப்பை, தீர்க்க முடியாத பிரச்னையாகவே காட்டப்படுகிறது. நம்மால் இதை அகற்ற முடியாததால், இனி குப்பை சேர்க்காமலிருப்பதே பெரிய விஷயம் என்பதாக கூறப்படுகிறது. இது எனக்கு உவப்பானதாக படவில்லை. மனிதர்களாகிய நாமே இக்குப்பையை சேர்த்தோம், இப்பிரச்னையை தீர்க்கும் பொறுப்பும் நமக்கே உண்டு." என்கிறார் ஸ்லாட்.
காற்று நிரப்பப்படக்கூடிய 40 அடி நீள இராட்சத பிளாஸ்டிக் குழாய்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு நீளமான அமைப்பாக மாற்றப்படுகிறது. அதில் நைலான் வலைகள் தொங்கவிடப்படுகின்றன. வளைவான இந்த அமைப்பு, ஒரு பெரிய குப்பை கூடை போன்று செயல்படுகிறது. கடல் வாழ் உயிரினங்கள், இதன் கீழாக நீந்தி செல்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் நீரோட்டத்தின் பாதையில் மிதந்து வரும்போது, நைலான் வலையில் சேகரமாகின்றன. ஒவ்வொன்றும் ஒரு மைல் நீளமான 60 நைலான் வலைகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாவதாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இது அமைக்கப்படுகிறது.ஜூலை முதல் இந்த அமைப்பு இயங்க ஆரம்பிக்கும். படகுகள் மூலம் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை வலையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் வரும் ஐந்து ஆண்டுகளில், பிளாஸ்டிக் குப்பைகளில் பாதி, அதாவது 40 ஆயிரம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.