தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னையில் மட்டும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரத்தில் வெயில் சற்று தணிகிறது.
இதுபோல், திருத்தணியில் அதிகபட்சமாக 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதிநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ மழை பதிவானது.
இதற்கிடையே, வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவியுள்ள மேக கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையுமு கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் பல இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பத்தில இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வழக்கத்தைவிட அதிக அளவில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதிக்கு முன்பே தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் எதிரொலியாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.