இஸ்ரேலின் தலைநகரான ஜெருசலேமில் இன்று எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க தூதரகத்தை டிரம்ப் திறந்து வைத்துள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இதன்பிறகு, டெல் அவில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் ட்ரம்ப் உறுதி அளித்தார். இதற்கு, பல நாடுகள் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் மற்றும் ட்ரம்பின் முக்கிய ஆலோசகரும் மருமகனுமாகிய ஜெரார்ட் குஷ்னர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதற்கிடையே, அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.