சிறப்பு பூஜை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் ஓர் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்செந்தூர் முருகன் கோயிலில், அந்த கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத பலர் சாமி அருகே அழைத்துச் செல்வதாகக் கூறி பக்தர்களை டிக்கெட் வாங்காமல் கோயிலுக்குள் அழைத்து செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பக்தர்களிடம் டிக்கெட்டுக் குரிய கட்டணத்தை அவர்களே வசூலித்துக் கொள்வதாகவும் இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கோவிலில் சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பூசாரிகளால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றதா? என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அங்கு, பயோமெட்ரிக் வருகை பதிவு கருவியை ஊழியர்களுக்காகப் பொறுத்திச் செயல்படுத்த வேண்டும், பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் கேட்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவில் ஆணையர் ஆகியோர் அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.