தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி அலுவலகத்திற்கு பொறித்த மீன் மற்றும் மீன் குழம்பு கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்தது பரபரப்பை கிளப்பியது.
சென்னையிலுள்ள காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பினை பணியாளர் ஒருவர் எடுத்துள்ளார். மறுமுனையில் பேசியவர், பொறித்த மீன் ஆர்டர் செய்துள்ளார். பணியாளர், 'ராங் நம்பர்' என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
தொடர்ந்து பொறித்த மீன் மற்றும் மீன் குழம்பு பற்றி விசாரணைகள் வரவே, "இது உணவகம் அல்ல. டிஜிபி அலுவலகம்," என்று பணியாளர்கள் விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொலைபேசி அழைப்புகள் அதிகமாக வந்ததால், காவல்துறையினர் இது குறித்து விசாரித்தனர். அதில் மெரினா கடற்கரை அருகே உள்ள உணவகம் பற்றி வந்த செய்தி குறிப்பின் முடிவில் டிஜிபி அலுவலக தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
காவல்துறையினர் அந்த உணவக உரிமையாளரை பிடித்து விசாரித்தனர். தனது கடை பற்றிய செய்தி குறிப்பில், டிஜிபி அலுவலக எண் வந்தது பற்றி தனக்குத் தெரியாது என்று அவர் விளக்கமளித்தார்.
ஆனாலும், காவல்துறையினர், குறிப்பிட்ட செய்தி குறித்து செய்தியாளரிடம் விசாரித்தனர். அப்போது, செய்தி நிறுவனம் தவறுதலாக அந்த எண், செய்தி குறிப்பில் வெளியாகி விட்டதாக விளக்கம் கூறியுள்ளது. தட்டச்சு பிழையின் காரணமாக, டிஜிபி அலுவலகம், உணவகமாக மாறியது வேடிக்கையாகிப் போனது.