கட்டிட தொழிலாளர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சுடுகாட்டிலேயே உணவு சாப்பிட்டு, அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாலகோல் சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு. இவரது, தொகுதியில் உள்ள சுடுகாடு ஒன்று கடந்த பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருந்ததால் சேதமடைந்து இருந்தது. இதனால், அந்த சுடுகாட்டை புரணமைக்க ராம நாயுடு முடிவு செய்து இதுகுறித்து அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர், கோரிக்கையை ஏற்ற மாநில அரசு சுடுகாட்டை புரணமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனால், இது சுடுகாடு என்பதால் புணரமைக்க டெண்டர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த எம்எல்ஏ, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டிற்கு வந்திருந்தார். அங்கு, கட்டிலை போட்ட எம்எல்ஏ இரவு உணவு சாப்பிட்டார். பின்னர், அங்கேயே இரவு முழுவதும் தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து தனது வீட்டுக்கு அவர் திரும்பினார். இவருடன் எம்எல்ஏவுடன் ஒரு உதவியாளர் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
எம்எல்ஏவின் இந்த முயற்சியால், பயத்தை போக்கி சுமார் 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து ராம நாயுடு கூறுகையில், “பேய், பிசாசு பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும் ” என்றார்.