டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவியை ஏதேனும் காரணம் காட்டி மறுக்கக் கூடாது என்று பாகம நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் கருவுற்ற பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் வழங்கப்படும் நிதியுதவியை பெறுவதற்காக விண்ணப்பித்த ஏழைப் பெண்கள், அதற்கான ஆதாரங்களை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவால் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் கடந்த 2006-07 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. அப்போது அத்திட்டத்தின் மூலம் கருவுற்ற பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6000 வழங்கப்பட்டது. 2011-12 ஆம் ஆண்டு முதல் இது ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டது.
2017-18 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்படி வழங்கப்படும் நிதியுதவி ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட போதிலும், அத்திட்டத்திற்கான நிபந்தனைகளுக்குட்பட்டு ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த நிதியுதவி வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தான் அந்த திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன்பாக கருவுற்று மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.12,000 மட்டுமே நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் உதவி பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இதுவரை அதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டிய சான்றுகளை வழங்கவில்லை. அவர்களில் யாரெல்லாம் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்கிறார்களோ, அவர்களுக்கு மட்டும் தான் நிதியுதவி வழங்கப் படும். மற்றவர்களுக்கு நிதியுதவி கிடைக்காது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக அறிவித்துள்ளனர்.
மகப்பேறு நிதியுதவிக்காக விண்ணப்பித்தவர்களிடமிருந்து உரிய ஆவணங்களை வாங்கி, இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அந்தந்தப் பகுதிகளில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் பணி என்றும், அவ்வாறு தாக்கல் செய்யாததற்காக எவருக்கேனும் நிதியுதவி மறுக்கப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட பகுதிகளின் கிராம செவிலியர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தேவையற்ற சலசலப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
மகப்பேறு நிதியுதவிக்காக விண்ணப்பித்தவர்கள் அதற்காக ஆதார் உள்ளிட்ட சான்றுகளை வழங்க வேண்டும். பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வாழ்பவர்கள், காதல் திருமணம் செய்து சொந்த ஊரில் இருந்து வெளியேறிவர்கள் போன்றவர்களால் இத்தகைய சான்றுகளை உடனடியாக வழங்க முடியாத நிலை உள்ளது. இதைக் காரணம் காட்டி, நிதியுதவி நிறுத்தப்பட்டால் அந்த பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் சத்தான உணவுகளையும், பிற ஊட்டச்சத்துகளையும் எடுத்துக் கொள்ள முடியாமல் போய் விடும். அதுமட்டுமின்றி, மகப்பேறு உதவித் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசுக்கும், பயனாளிகளுக்கும் பாலமாக செயல்படுபவர்கள் கிராம செவிலியர்கள் தான். ஆவணங்களை வழங்காததற்காக நிதியுதவி நிறுத்தப்பட்டால் பாதிக்கப்படும் பயனாளிகளின் கோபத்தை கிராம செவிலியர்கள் எதிர்கொள்ள நேரிடும்.
கடந்த ஆண்டு வரை மகப்பேறு உதவித் திட்டத்திற்கான ஆவணங்களை வழங்க எல்லையில்லாத கால அவகாசம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.18,000 உதவித் திட்டம் முழுமையாக செயல்படுத்தப் பட இருப்பதால் இருவகையான பயனாளிகளுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கெடுபிடி காட்டப்படுகிறது. இது முற்றிலும் தேவையற்றது. தமிழ்நாடு முழுவதும் 8706 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திலும் சராசரியாக 4 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்படுவர்.
மகப்பேற்றின் போது தாய்- சேய் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. 35 ஆயிரம் பேருக்கு இந்த உதவி வழங்கப்படவில்லை என்றால் அது தாய்-சேய் இறப்பு விகிதத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக விண்ணப்பித்தவர்கள் அதற்கான சான்றுகளை வரும் திசம்பர் வரை தாக்கல் செய்யலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும். ஆவணம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் காரணம் காட்டி மகப்பேறு நிதியுதவியை எந்த வகையிலும் நிறுத்தக் கூடாது.
அத்துடன் சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வசதியாக, காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.