அமீரகத்தில் வசிக்கும் இந்திய பெண்ணை வெளியேற்றிவிடுவதாக மிரட்டி மோசடி

Jul 15, 2018, 23:36 PM IST
குடியேற்ற துறை அதிகாரிகள் போல பேசி, அபுதாபியில் (Abu Dhabi) வசிக்கும் இந்தியப் பெண்ணிடம் 1,800 தினார்கள் (ஏறத்தாழ ரூ.33,000) மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியப் பெண் ஒருவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அவருக்குக் கடந்த புதன்கிழமை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. துபாய் குடிபெயர்தல் மற்றும் வெளிநாட்டவர் நல பொது இயக்குநரகத்திலிருந்து பேசுவதாக கூறிய நபர்கள், அந்தப் பெண்ணின் குடியேறுதல் குறித்த ஆவண கோப்பில் சில முக்கிய ஆவணங்கள் இல்லையென்றும், ஆகவே குடியேற்ற சட்டத்தின் 18வது விதிப்படி இப்பெண்ணின் பெயர் கறுப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த ஆவணங்கள் இல்லையென்பதால், குடியேற்ற சட்டத்தின் 20வது பிரிவின்படி, அப்பெண் அமீரகத்தை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும், டெல்லி விமான நிலையத்தில் கைது நடவடிக்கை இருக்கும் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
 
இந்திய அதிகாரிகளிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினால் இந்த நடவடிக்கையை தவிர்க்கலாம் என்று கூறிய அந்நபர்கள், அதற்கு வழக்குரைஞர் கட்டணமாக 1,800 தினார்கள் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 
ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்தத் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்பெண் வெஸ்டன் யூனியன் மணி (Western Union money) என்ற முறையில் இந்திய மதிப்பில் ஏறத்தாழ 33 ஆயிரம் ரூபாயை பரிமாற்றம் செய்துள்ளார். அந்தப் பணம் மோசடி பேர்வழிகளால் ஐந்தே நிமிடத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி அறிக்கை கூறுகிறது.
அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களை குறி வைத்து மோசடி கும்பல் ஏமாற்றி வருவது தொடர்கிறது.
 
துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர், இது போன்ற மோசடி (immigration scam) குறித்து உள்ளூர் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும் என்றும், தொலைபேசி வாயிலாக எந்த தனிப்பட்ட தகவல்களையும் யாருக்கும் தராமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

You'r reading அமீரகத்தில் வசிக்கும் இந்திய பெண்ணை வெளியேற்றிவிடுவதாக மிரட்டி மோசடி Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை