பெருந்தலைவர் காமராஜரால் கட்டப்பட்ட பெருஞ்சாணி அணை கன்னியாகுமாரி மாவட்டத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சிமலையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வேகமாக நிரம்பி வருகிறது பெருஞ்சாணி அணை. தற்போது அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது. பெருஞ்சாணி அணையின் முழு கொள்ளளவு 77 அடி.
ஏற்கனவே முன்னெச்சரிக்கை காரணமாக அணையிலிருந்து சுமார் 200 கன அடி உபரி நீரை திறந்து விட்டுள்ளது பொதுப்பணித்துறை. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பறளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 71அடி தொட்டதும் பொதுவாக அணையை திறந்து விடுவது வழக்கம். ஆனால் இம்முறை 75 அடி நெருங்கியுள்ளது. தற்போது தான் உபரி நீரை திறக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.
திறந்து விடப்பட்ட உபரி நீர் தாழ்வான பகுதிகளான திக்குறிச்சி, திருவட்டாரு, குழித்துறை போன்ற பகுதிகளில் வேகமாக பாய்ந்தோடுவதால் அருகில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.