நூறு ஆண்டுகளில் ஒரு முறை நிகழக்கூடிய நீளமான சந்திர கிரகணம், ஜூலை 27 வெள்ளியன்று காணப்பட உள்ளது.
பூமிக்கு பின்னாக சந்திரன் கடந்து செல்லும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதே சந்திர கிரகணம் (Lunar eclipse). நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தின்போது, சந்திரன், சூரிய ஒளியை பெறாமல் முழுமையாக மறைக்கப்படும். பூமியின் வளிமண்டலத்தில் சிதறும் சூரிய ஒளி மட்டுமே சந்திரன் மீது படுவதால், அது இரத்தமாக காட்சியளிக்கும். இது 'இரத்த நிலா' - Blood Moon(சிவப்பு நிலா) என்று அழைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (இன்று) இரவு இந்திய நேரப்படி, 11:44 மணிக்கு ஆரம்பமாகும் கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 4:58 மணி வரைக்கும் நீடிக்கும். கிரகணத்தின் பல்வேறு படிநிலைகள் ஆறு மணி நேரம் நீடிக்கும். முழு சந்திர கிரகணத்தை சனிக்கிழமை அதிகாலை 1:15 முதல் 2:43 மணி வரை காணலாம்.
சுற்றுப்பாதையில் பூமிக்கு வெகு அருகில் சந்திரன் வருவது 'சூப்பர் மூன்' எனப்படும். தற்போது பூமிக்கு வெகுதொலைவில் சந்திரன் உள்ளது. இந்த நிலை 'மைக்ரோ மூன்' எனப்படும். சந்திரன் மிகச் சிறியதாக காட்சியளிக்கும் தருணத்தில் நிகழ்வதால், இது முழுமையானதுடன், வெகு நீளமான சந்திர கிரகணமாகவும் அமையும்.
21-ம் நூற்றாண்டில் மொத்தம் 230 முறை சந்திர கிரகணம் நிகழும். இவற்றும் 85 மட்டுமே முழுமையான கிரகணங்கள். வெள்ளிக்கிழமை நிகழ இருப்பது இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணமாகும். இது 1 மணி 43 நிமிடங்கள் மற்றும் 35 விநாடிகள் நீடிக்கும்.
இந்தியா, மத்திய கிழக்கு, தென் சீனா மற்றும் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ளவர்கள் இந்த கிரகணத்தை பார்க்க இயலும். கிரீன்லாந்து, கனடா மற்றும் அமெரிக்காவிலுள்ளவர்கள் இதை காண இயலாது.