அமெரிக்காவில் விசா நீட்டிப்பு மற்றும் விசா மாற்றம் மறுக்கப்பட்டோர், ஐ-94 என்னும் வருகை மற்றும் புறப்படல் விண்ணப்பத்தில் அனுமதிக்கப்பட்ட நாட்கள் நிறைவுற்றோருக்கு முன்னிலையாகும் அறிவிக்கை அனுப்பப்பட வேண்டும் என்ற கொள்கை மாற்றம் நடைமுறைக்கு வருவது தாமதமாகிறது.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையின் முதற்படி 'முன்னிலையாகும் அறிவிக்கை' (Notice to Appear -NTA) ஆகும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகள்படி, சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வழங்கும் (Customs and Border Protection - CBP)ஐ-94 என்னும் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலம் நிறைவுறுவதற்குள் விசா மாற்றம் அல்லது நீட்டிப்புக்கான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டால், அந்த நபருக்கு 240 நாட்கள் பணி அனுமதியுடன் கூடிய கருணை காலமாக அனுமதிக்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அந்த நபர் புதிதாக ஒரு விண்ணப்பத்தை உடனடியாக பதிவு செய்ய முடியும். அப்போது அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பது சட்டவிரோதமாக கருதப்படாது அல்லது அவர், அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தங்கியிருந்து அல்லது வேறொரு விசா அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு திரும்பி வர இயலும்.
ஆனால், மாற்றம் செய்யப்பட்ட புதிய கொள்கையின்படி, ஐ-94 என்னும் வருகை மற்றும் புறப்படல் விண்ணப்பத்தில் அனுமதிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே, குறிப்பிட்ட நபர் சமர்ப்பித்த விசா விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை (USCIS), குடிபுகல் நீதிபதிக்கு முன்பு முன்னிலையாக வேண்டும் என்ற அறிவிக்கையை (Notice to Appear -NTA) அனுப்பும். நீதிபதி முன்பு அந்த நபர் முன்னிலையாக தவறினாலோ அல்லது அந்த நபருக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனாலோ, அவர் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
இந்த புதிய கொள்கையை இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்துமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் இன்னும் இறுதி செய்யப்படாத காரணத்தால், புதிய கொள்கை மாற்றம் நடைமுறைக்கு வருவது தள்ளிப்போடப்பட்டுள்ளது.