பெருகிவரும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்... காரணங்கள் இங்கே.... நிவாரணங்கள் எங்கே....!!!

by Isaivaani, Feb 1, 2018, 14:07 PM IST
நாட்டில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. நாட்டின் கண்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இன்று காட்டுமிராண்டிகளால் மிதிக்கப்படுகிறார்கள்.
பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாய் பிறந்தது தவிர, என்ன தவறு செய்தார்கள் ?. இந்த சமுதாயத்தை எது இந்த காமக்கொடூர நிலைக்கு தள்ளியது.? இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்.? நாடு என்ன செய்ய வேண்டும்.?
வாருங்கள் விரிவாக பார்க்கலாம்..
காமத்தைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளுக்கு முன்பு நம் பெற்றோர்களுக்கு தெரிந்த விஷயங்களை விட, இன்றைய இளம் பருவத்தினர் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்மனதில் உறங்கும் வக்கிர எண்ணங்கள் அனைத்துக்கும் தீனிபோட காத்திருக்கிறது பல இணைய தளங்கள். விரல்நுனியில் மொபைல் போனில் பதுங்கியிருக்கும் போர்னோக்கள். ஒரு பொத்தானை அழுத்தினால் கொட்டிக் குவியும் நீலப் படங்கள், இதற்கென பல இணையதளங்கள் வீடியோக்களை வாரி வழங்குகின்றன.
பத்திரிகைகளைத் திறந்தால் கவர்ச்சி படங்கள், என்று எங்கு பார்த்தாலும் இன்றைய சமூகம் கிளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் ஏராளம் ஏராளம்.. தொலைக்காட்சியில் இரவு பத்து மணிக்கு மேல் ஒளிபரப்பு செய்ய வேண்டிய பல நிகழ்ச்சிகள் நாள் முழுக்க ஒளிபரப்பப்படுகிறது. குறிப்பாக நடன நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஒளிபரப்பாகும் ஆபாச நடனங்கள்.  இதில் கொடுமை என்னவென்றால், அதில் பத்து வயது சிறுமிக்கு குட்டை பாவாடை அணிவித்து, இன்னொரு சக வயது சிறுவனோடு குத்து டான்ஸ் ஆட விடுகிறார்கள். இதனை பார்க்கும்போது, வளரும் குழந்தைகளுக்கு இப்படித்தான் நடனம் ஆடவேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.
குறிப்பாக, இதுபோன்ற ஆபாசம் நிறைந்த நிகழ்ச்சிகளையும்,  வக்கிரம் நிறைந்த காட்சிகளைப் பார்க்கும் சமூக விரோத மனப்பாங்கு உள்ளவர்கள், இதனால் தூண்டப்படும்போதுதான் கொடுமையான பாலியல் அத்துமீறல்கள் நிகழ்கின்றன.
குழந்தைகளைக் குறிவைக்கும் காமுகர்கள் இங்குதான் வெளிப்படுகிறார்கள். கையாலாகாத நபர்கள் இவர்கள். இதன் காரணமாகவே குழந்தைகளைக் குறிவைக்கிறார்கள். எளிதில் அணுகக்கூடிய, கள்ளங்கபடம் இல்லாதவர்களாக, குழந்தைகள் இருப்பது இவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. Anti social personality disorder என்கிற ஆளுமைக் கோளாறு உள்ள நபர்கள், இந்த விஷயத்தில் வெகு ஆபத்தானவர்கள். நாம் சமூகத்தில் சந்திக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் போன்ற செயல்களை செய்யும் தன்மை கொண்ட நபர்கள் இவர்களே.
கைபேசி மூலமாகவும் சமூக வலைதளங்களிலும் முன்பின் அறியாதவர்களோடு எளிதில் தொடர்புகொள்ளக் கூடிய துரித வசதிகள், ஆண்களுக்கு தவறான எண்ணங்களைத் தூண்டுகின்றன.
இதனால் அவர்களுக்கு குழந்தைகளைக் கூட ஒரு வக்கிரப்புத்தியுடன் அணுகும் மனப்பான்மையை வளர்த்து அவர்களை வன்முறையில் ஈடுபட வைக்கிறது. பல ஆண்கள் தற்போது மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். படித்தவர்கள், ஏழைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தற்போது மது அருந்தி வருகின்றனர். இந்த நாளில், குடிக்காதவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. பெண் பார்க்கச் செல்பவர்கள் முதலில் ஜாதகம் பார்க்கிறார்களோ, இல்லையோ! அந்தப் பையன் குடிக்காமல் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பார்க்கின்றனர்.
இந்த குடிப்பழக்கம் ஆண்களை மற்ற குற்றச்செயல்களை, எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் ஈடுபடச் செய்கிறது, பாலியல் வன்முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஆண்களுக்கு முறையான பாலியல் கல்வி சிறு வயதிலிருந்தே அளிக்கப்படாததும் மற்றொரு காரணம் என்றும் சொல்லலாம். ஆடை கலாச்சாரம் கிழிந்து வரும் இந்த காலத்தில், பெண்ணியவாதிகள் அதை தைத்து போட முயற்ச்சிக்க வேண்டுமே தவிர, "என் உடை என் உரிமை" என்கிற உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கிறார்கள்... இது வக்கிர எண்ணம் படைத்த ஆண்களை ஊக்குவிப்பதாகவே தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், அரைகுறை ஆடையுடன் தோன்றும் ஒரு பெண்ணை ஒரு ஆண் பார்க்கும்போது, அவனது பார்வையிலேயே அவனது பாலுணர்வு தூண்டப்படுகிறது. எண்ணங்கள் மாறுகிறது, மதி மயங்கி தவறான முடிவுக்கு செல்ல அவனால் முடிகிறது.
 
ஆனால், அரைகுறை உடையில் தோன்றும் ஒரு ஆணை, ஒரு பெண் பார்க்கும்போது, அந்த பெண்ணுக்கு எந்த உணர்ச்சிகளும் தோன்றுவதில்லை. இதுதான் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள பெரிய வித்தியாசம். இதனால், ஒருவன் தன்னை பார்த்தால் எளிதில் அவன் உணர்ச்சி வசப்பட முடியாதபடி, பெண்கள் உடையணிய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதை பெண்ணியவாதிகளால் ஒருபோதும் ஒத்துக்கொள்ளவே முடியாது.
குழந்தை பாதுகாப்பு..
பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக குழந்தைகளின் நடத்தைகளை கவனத்தில் கொள்வதில்லை. தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
 
இதனால் குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. குழந்தைகள் தொலைந்துபோவது வரை அவர்கள் என்ன செய்கிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்பது தெரிவதில்லை. குழந்தைகளிடம் அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்துக்குள் இருக்கும் நெருங்கிய உறவினர்களே இழிவாக நடந்துகொள்கின்றனர். இதை குழந்தைகள் வெளியே சொல்லத் தயங்குகின்றனர் அல்லது அஞ்சுகின்றனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் முடிந்தவரை அதிக நேரம் செலவிட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் சிறுவயதிலிருந்தே பல விஷயங்களை வெளிப்படையாக புரியும் விதத்தில் சொல்லி வளர்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஒளிவு மறைவு இல்லாமல் தங்களிடம் வந்து சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நட்பாக பழக வேண்டும். யாரிடம் பழகுவது, யாரிடம் பழகக் கூடாது, ஆண்களின் தொடுகை குறித்த "குட் டச்’, ‘பேடு டச்’ (Good touch, Bad touch)" போன்றவற்றை கற்றுத்தர வேண்டும்.
சட்டத்தில் என்ன வழி.. ?
பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த மூன்று மாதங்களில் விசாரணைசெய்து நீதி வழங்க வேண்டுமென்று ஜே.எஸ். வர்மா கமிட்டி வலியுறுத்தியுள்ளது. ஒருவழியாக “பாலியல் குற்றத்துக்கு பாதிக்கப்படும் பெண் காரணமில்லை" என்ற பார்வையே நிர்பயா வழக்குக்கு பிறகுதான் வந்திருக்கிறது.
பெண்களும், பெண் குழந்தைகளும் எங்கு சென்றாலும் பாதிக்கப்படுகிறார்கள். எந்த ஆண்களையும் நம்பி பேசக்கூடாது என்ற நிலைமைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக, சிறுமி ஹாசினி கொலையை அடுத்து அக்கம்பக்கத்தினரிடம் பெண் குழந்தைகளை பழகவிடுவதற்குக் கூட பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். ஒவ்வொருமுறை பாலியல் வன்கொடுமை நடக்கும்போதும் மக்கள் எழுச்சியுற்றுப் போராடி நியாயம் கேட்க முடியாது, சட்டத்தின் மூலமாகத்தான் சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சட்டங்கள் நடைமுறைக்கு வரவே தாமதமாகிறது”.
ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறுதலாக நடந்துகொண்டால், ஆண்களின் ஆணுறுப்பை வெட்டியெறியலாம் என்று சில நாடுகளில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பற்றி மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும். 17 வயதுப் பெண் நந்தினி தொடங்கி ஹாசினி, ரித்திக்கா என்று குழந்தைகளைக்கூட விட்டு வைப்பதில்லை. பெண்கள்தான் கவர்ச்சியாக ஆடை அணிகிறார்கள் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்று கூறுகிறார்கள், ஆனால் மூன்று வயது குழந்தையிடம் என்ன கவர்ச்சி உடையை கண்டார்கள்.
தவறு செய்தவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதன்மூலம் இந்த தவறுகளை சரி செய்ய முடியாது. ஒருமுறை தவறு செய்தவன் மீண்டும் நன்னடத்தையாக நடந்துகொள்வது மிகவும் கடினம், சிறையிலிருந்து விடுதலையாகி வருபவன் மீண்டும் அதே தவறை செய்ய முயல்வான், எனவே அவன் விடுதலைக்கு பிறகும் கண்காணிக்க பட வேண்டும்.
பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் தண்டனை வழங்கப்படுவது 20 சதவீதத்துக்கும் குறைவு, நீதிமன்றங் களில் இதுதொடர்பான வழக்குகள் ஆயிரக் கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன. உலகளவில் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் குழந்தைகள் இந்தியாவில் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 3 மணி நேரத்திற்கு ஒரு 16 வயதுக்கு உட்பட்ட குழந்தையும், 13 மணிநேரத்துக்கு ஒரு 10 வயதுக்கு உட்பட்ட குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த வகையில் தினமும் 10குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து குற்றச் சம்பவங்களே ஊடகங்களில் வெளிவந்தது, கடந்த சில ஆண்டுகளாக நாளொன்றுக்கு கணக்கில்லாமல், பெண்களுக்கு எதிராக பாலியல்ரீதியான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன.  ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், நீதிமன்றத்தை அணுகுபவர்கள் மிகச் சிலர்தான்.
அன்றாடம் செத்து செத்துப் பிழைக்கும் சாமானிய பெண்கள், தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதேயில்லை. சமுதாயத்தில் நம்மை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணம், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சம் என, பலர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத் தயக்கமே குற்றங்களை அதிகரித்துவிடுகிறது, இதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
இதில் பரிதாபம் என்னவென்றால், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படும் பெண்களில் 70 சதவீதத்தினருக்கும் அதிகமானவர்களுக்கு 10 நாட்கள் கடந்துதான் மருத்துவப் பரிசோதனையே நடத்தப்படுகிறது. பெரும்பாலான மருத்துவ அறிக்கைகளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இல்லாமல், அவர்களுக்கு எதிராகவே எழுதப்படுகின்றன. அவற்றைக் கொண்டு குற்றவாளிகள் ஜாமீன் பெறுவது மட்டுமல்ல, வழக்கைத் திசைதிருப்பவும் பயன்படுத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல் துறை மேற்கொள்ளும் தொடர் விசாரணை, அவர்களின் அநாகரிகமான கேள்விகள், சரியான ஆலோசனைகள் வழங்காத போக்கு, தகுந்த சிகிச்சை அளிக்கப்படாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால், பாதிக்கப்பட்டோர் நம்பிக்கை இழக்கின்றனர். பாலியல் குற்றங்களைப் பொறுத்தவரை சட்டங்கள் போதுமானதாக இல்லை, கடுமையானதாகவும் இல்லை என்பது ஒரு பெரும் குறை, அதேபோன்று பாலியல் கல்வியும் மிக மிக அவசியம். தொடர்ந்து நிகழும் பாலியல் குற்றங்களை மனதில் வைத்தாவது பாலியல் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை ஆமை வேகத்தில் ஆண்டுக்கணக்கில் விசாரித்து காலம் தாழ்த்தி தீர்ப்பு வழங்கப்படுகிறது, அதற்குள் குற்றவாளிகள் இயற்கை மரணம் அடைந்துவிடுகிறார்கள், குறைந்த கால விசாரணை, கடுமையான தண்டனை இருந்தால் மட்டுமே பாலியல் குற்றங்கள் முழுமையாக களையப்படும்.
பெண்களின் பாதுகாப்பிற்கான "பாக்ஸோ சட்டம்" வந்து நான்கு மாதங்கள் வரை வழக்குகள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இப்போது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. பாக்ஸோ சட்டம் குறித்து பின்வரும் நாட்களில் விரிவாக காணலாம். 18 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள். அதாவது இளம் வயது திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், வீட்டை வீட்டு ஓடிப்போகுதல், குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் தொழிலில் ஈடுப்படுதல், உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் போன்ற ஆபத்தில் உள்ள குழந்தைகளை காப்பாற்ற, உடனடியாக தகவல் தெரிவிக்க, (சைல்ட் லைன்) 1098 என்ற இலவச எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், உரிமை, பாதுகாப்புக்குக்காக 48 சட்டங்கள் உள்ளன. ஆனால், அவை சரிவர அமல்படுத்தப்படவில்லை. கொள்கை முடிவுகளை எடுக்கிற அரசும், அதிகாரங்களை படைத்த காவல் அதிகாரிகளும் அதற்கான உரிய அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. அதை அமல்படுத்துவதிலும் தீவிரம் காட்டினால் மட்டுமே, இனிவரும் தலைமுறை நிம்மதியாக வாழும்.

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை