ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் விலங்குகளை போல அணிவகுத்து நிற்கின்றனர் என்று நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் சாடியுள்ளது.
ஐ.பி.எல் 11-வது சீனுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த டி-20 கிரிக்கெட் தொடருக்காக 8 அணிகளும் 18 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் வீரர்களில் 578 வீரர்களை எட்டு அணி உரிமையாளர்கள் ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏலம் பெங்களுருவில் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.431 கோடிக்கு 169 வீரர்கள் ஏலம் போனார்கள். இதில் 56 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஏல நிகழ்ச்சியில் நியூசிலாந்தைச் சேர்ந்த 24 வீரர்களில் வெறும் 7 வீரர்கள் ஏலம் போனார்கள். இதனால் கடுப்படைந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஐபிஎல் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளது. ஐபிஎல் ஏலம் கேலிக்குரியது எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் ஹீத் மில்ஸ் கூறுகையில், “ஐபிஎல் ஏலம் கண்ணியமற்ற, கொடூரமான மற்றும் தேவையற்ற வேலை நடைமுறை. இன்றைக்கு அது கேலிக்குரியதாக இருக்கிறது.
இதன் மொத்த அமைப்புமே தொன்மையான முறையில் இருப்பதாக நினைக்கிறேன். ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் விலங்குகளை போல அணிவகுத்து நிற்பதை உலகத்தவர்கள் பார்க்கும்போது, வீரர்களுக்கு அவமானகரமானதாக இருக்கிறது.
வீரர்கள் யாருடன் விளையாடப்போகிறோம், யார் தங்களது அணி வீரர்கள், யார் அணியின் நிர்வாகி, யார் அணியின் உரிமையாளர் என எதுவும் தெரியாமல் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். உலகத்தில் வேறு எந்த விளையாட்டு லீக்கிலும் வீரர்களை ஈடுபடுத்துவது இல்லை.
இந்தியன் பிரிமீயர் லீக்கில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. நிறைய சிறந்தவற்றை கிரிக்கெட்டுக்கு செய்திருக்கிறது. ஆனால், இதே போல் தொழில்முறை விளையாட்டான தடகள வீரர்களையும் ஏலத்தில் எடுப்பதை பார்க்க விரும்புகிறேன். இதிலிருந்து பார்க்கும்போது, இது தொழில் அல்ல; மொத்த அமைப்புமே தவறானது” என்று கூறியுள்ளார்.
பிரண்டன் மெக்கல்லம் (சென்னை சூப்பர் கிங்ஸ்), வில்லியம்சன்(ஐதராபாத்), டிரெண்ட் போல்ட் (டெல்லி), கிராண்ட்ஹோம் (பெங்களூர்), காலின் முன்ரோ (தில்லி), டிம் சவுத்தி (பெங்களூர்), மிட்செல் சான்ட்னெர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகிய நியூசிலாந்து வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.