Sunday, Dec 5, 2021

கர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது எப்படி?

பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை; மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை.

ஏனெனில், மகிழ்ச்சியான மனநிலை பெண்களுக்கு சுரக்கும் பல ஹார்மோன்களை ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான கர்ப்ப வளர்ச்சிக்கும்; பிரசவ நேரத்தில் இடுப்புத் தசை இயக்கங்களைக் குஷிப்படுத்தி, பிரசவம் எளிதாக நிகழ்வதற்கும்; பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரத்தல், கருப்பைத் தன்னிலை மீள்தல் உள்ளிட்ட உடலியல் இயக்கங்கள் சரியாக நிகழ்வதற்கும் துணைபுரிகிறது. எனவே, கர்ப்பிணிகளுக்கு மனமும் இதமாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி நாட்டில் 100 கர்ப்பிணிகளில் 16 பேர் கர்ப்ப காலத்தில் மன நோய்களுக்கு உள்ளாவதாகவும், 100-ல் 20 பேருக்குப் பிரசவத்துக்குப் பிறகு மனநலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

காரணங்கள் என்ன?

பரம்பரைத் தன்மை, பணிச்சுமை, அடிக்கடி இடம் மாறுதல், ஊர் மாறுதல், குடும்பத்தில் வறுமை, குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், பாலியல் தொல்லைகள், பெற்றோருடன் அல்லது புகுந்த வீட்டில் ஒட்டுதல் இல்லாதது, தம்பதிகளுக்குள் பிணக்கு, கணவரின் இரண்டாம் திருமணம், குடிப்பழக்கம், மனைவியை அடித்தல், திட்டுதல் போன்ற தீயநடத்தைகளின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், ஒவ்வாத குடும்பச் சூழல், குடும்பத்திலும் சமூகத்திலும் ஆதரவற்ற நிலை, உறவுமுறை சிக்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வு, நெருங்கிய உறவுகளில் அல்லது நட்பில் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிரிவுகள், பண இழப்பு, பணி இழப்பு, முதல் பிரசவ பயம், சென்ற பிரசவத்தில் ஏற்பட்ட கொடிய அனுபவங்கள், உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்றவற்றால் மனம் பாதிக்கப்படுவது இயல்பு.

சில பெண்களுக்கு ஏற்கனவே மனநோய் இருந்திருக்கலாம்; இப்போதும் இருக்கலாம். மனநோயுடன் குழந்தை பெற்றுக்கொள்வது குழந்தையைப் பாதிக்கும் என்று கவலைப்படலாம். அல்லது அவர்கள் மனநோய்க்காக வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரைகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என பயந்து, அந்த மாத்திரைகளை நிறுத்தி விடலாம்.

இவை போன்ற இன்னும் சில காரணங்களால், கர்ப்பிணிகளுக்கு மனச்சோர்வு (Depression) ஏற்படுவது சாதாரண நடைமுறைதான். இதில் மிதமான மனச்சோர்வு, தீவிர மனச்சோர்வு என இரண்டு வகைகள் உண்டு. மனச்சோர்வின் அறிகுறிகள் மிதமான மனச்சோர்வு பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படவே செய்யும். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், தீவிர மனச்சோர்வு ஏற்பட்டால் அதை கவனிக்க வேண்டியது அவசியம். உறக்கம் குறைவதும், உடலில் சக்தி இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுவதும் தீவிர மனச்சோர்வுக்கு முதலில் தோன்றும் அறிகுறிகள். இந்த இரண்டுமே கர்ப்பிணிகளுக்கு முதல் டிரைமெஸ்டரில் இயல்பாகவே இருக்கும் என்பதால், இவை மனச்சோர்வின் அறிகுறிகளாகக் கருதப்படுவது சற்று தாமதமாகலாம்.

அடுத்ததாக, பசி குறைவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, காரணமற்ற கவலை, எரிச்சல், கோபம், அழுகை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவை எல்லாமே மகப்பேறு மருத்துவரின் சரியான ஆலோசனைகள் மூலம் சரியாகிவிடும்.தீவிர மனச்சோர்வு பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகுதான் ஏற்படும். ஒரு சிலருக்குக் கர்ப்ப காலத்திலும் ஏற்படலாம். இவர்களுக்கு பயம், பதற்றம், மனக்குழப்பம், குழந்தையைப் பேணுவதில் ஆர்வமின்மை, குடும்பத்தாருடன் பேசுவதும் பழகுவதும் குறைவது, தற்கொலை முயற்சி, குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சி போன்ற மோசமான
அறிகுறிகள் தோன்றும்.

இன்னும் சிலருக்கு மனப்பதற்றம்(Anxiety), இருதுருவ மனக்கோளாறு(Bipolar disorder), மனச்சிதைவு நோய்(Schizophrenia), உண்ணல் கோளாறுகள், சுழல் எண்ண கட்டாயச் செயல் கோளாறுகள்(Obsessive Compulsive Disorder) ஆகியவையும் ஏற்படுவதுண்டு.

என்ன பிரச்னை?

மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகள் தொடக்கத்திலிருந்தே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், கருவில் வளரும் குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றாலும், சிலருக்குப் பிரசவ நேரத்தில் கருப்பை வாய் திறப்பது தாமதமாவது, குழந்தை கீழிறங்குவது தாமதமாவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சுகப்பிரசவம் ஆவது தடுக்கப்படலாம்; சிசேரியன் பிரசவம் தேவைப்படலாம்.

என்ன சிகிச்சை?

ஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும். மரபுரீதியாக மனக்கோளாறு உள்ளதென்றால் அதையும் அவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.

முந்தைய கர்ப்பத்தின்போதும், பிரசவத்துக்குப் பிறகும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த விவரத்தையும் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் தற்போதைய பிரசவத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக, ஏற்கெனவே சாப்பிட்டு வரும் மனநல மாத்திரைகளைத் தொடரலாமா அல்லது புதிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்து பின்பற்ற வேண்டும்.

கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.

கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

அடுத்து வளைகாப்பு என்று ஒரு சடங்கு நடத்தப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்? நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு! என்று கர்ப்பிணிக்கு மனதளவில் உறுதியை அதிகப்படுத்தவும், பிரசவ பயத்தைப் போக்கவும் இது உதவுகிறது.

இப்போதைய சூழலில் இம்மாதிரியாக கர்ப்பிணியை மனதளவில் தயார் படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

மன அழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள்

* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.

* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.

* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

You'r reading கர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Aval News