டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த என். சந்திரசேகரன், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சேர்மனாக நியமிக்கப்பட்டார்.
கடந்த நிதியாண்டில் இவர் பெற்ற ஊதியம், டிசிஎஸ் கொடுத்த ஊதியத்தைப் போன்று ஏறக்குறைய இருமடங்காகும். டாடா சன்ஸ் சமீபத்தில் தாக்கல் செய்த ஆண்டு அறிக்கையில் இந்த விவரம் இடம் பெற்றுள்ளது.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்ட்ரி, 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அவர் ஆண்டு வருமானமாக 16 கோடி ரூபாய் பெற்று வந்தார். டிசிஎஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த என். சந்திரசேகரன், அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார். டிசிஎஸ் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது அவர் 11 மாதங்களில் 30 கோடியே 15 லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார்.
இந்தக் குழுமத்தின் பார்ஸி இனத்தவர் அல்லாத முதல் சேர்மன் என். சந்திரசேகரன் ஆவார். பொறுப்பேற்றது முதல் டாடா குழும பங்குதாரர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையேயான உறவு சுமூகமாக இருக்கும் வண்ணம் சந்திரசேகரன் கவனம் செலுத்துகிறார். 32 நிறுவனங்களை கொண்ட இந்த பெரிய குழுமத்தின் சேர்மனாக இருப்பது எளிதான காரியம் அல்ல என்று முதலீட்டு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமானபோக்குவரத்து, பாதுகாப்பு துறை ஆகியவற்றில் புதிதாக இறங்கும் டாடா சன்ஸ், எஃகு போன்ற தங்கள் பாரம்பரிய தொழில்களை வளர்த்தெடுக்க முயல்கிறது. நன்றாக நடக்காத தொழில்களை அக்குழுமம் மூடியும் வருகிறது.
2018 மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் 85 விழுக்காடு கமிஷன் என்னும் தரகு, மற்றும் லாபத்தில் பங்கு உள்ளிட 55 கோடியே 11 லட்சம் என். சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஜூன் மாதம் முதல் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வரும் சௌரப் அக்ரவால் ஒன்பது மாதங்களில் 13 கோடியே 46 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளார்.