பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் சேர மாட்டார் என்றும், தனிக்கட்சிதான் தொடங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தும் பல மாதங்கள் ஓடிவிட்டன. இதற்கிடையே, அவர் பாஜகவின் கொள்கைகளையும், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரையும் அவ்வப்போது புகழ்ந்து பேசி வருகிறார். அவர் அடுத்த மாதம் கட்சித் தொடங்கப் போவதாகவும் சமீபத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில், தர்பார் படப்பிடிப்புக்கு சென்று இன்று காலை சென்னை வந்த ரஜினிகாந்த், விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம், நாட்டின் ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டுமென்று அமித்ஷா கூறியிருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அது வந்து.. நாட்டின் ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டு வர முடியாது.
தமிழ்நாடு மட்டுமல்ல, தென்மாநிலங்களில் யாரும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வட மாநிலங்களில் கூட பல மாநிலங்களில் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பதிலளித்தார். தொடர்ந்த மற்ற கேள்விகளுக்கு அவர் நிற்காமல், வேகமாகச் சென்று விட்டார்.