பிரதமர் மோடி ஒருவருக்காக சர்தார் சரோவர் அணையை வேகமாக நிரப்பி, ஆயிரக்கணக்கானோரை மூழ்கடிக்கிறார்கள். மறுவாழ்வு பணிகளையே மேற்கொள்ளாமல், பிரதமரின் பிறந்த நாளுக்காக அணையை நிரப்பியுள்ளார்கள் என்று மேதா பட்கர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது 69வது பிறந்த நாளை சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடினார். அப்போது சர்தார் சரோவர் அணை நிரம்பியதை கண்டு ரசித்தார். அணைப் பகுதியில் உள்ள பட்டாம்பூச்சிப் பூங்காவுக்கு சென்று, பைக்குள் அடைத்து வைத்திருந்த பட்டாம்பூச்சிகளை திறந்து விட்டார்.
இந்நிலையில், சர்தார் சரோவர் அணையை நிரப்புவதால், மத்தியப் பிரதேசத்தில் மூழ்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். நர்மதா பச்சா அந்தோலன் என்ற தொண்டு அமைப்பை நடத்தி வரும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் அந்த மக்கள் நேற்று நர்மதா ஆற்றில் மோடி கொடும்பாவி எரித்து போட்டு போராட்டம் நடத்தினர்.
இதன்பின், மேதா பட்கர் கூறியதாவது:
சர்தார் சரோவர் அணையில் முழுக் கொள்ளளவுக்கு நீரை தேக்கினால் மத்தியப் பிரதேசத்தில் 192 கிராமங்கள் நர்மதா ஆற்றில் மூழ்கும். அதனால், அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு மாற்று இடம் உள்பட மறுவாழ்வு பணிகள் இன்னும் செய்து முடிக்கப்படவில்லை.
இதற்கு மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு குஜராத் மாநில அரசு தர வேண்டிய ரூ.1857 கோடி இழப்பீட்டு தொகையை தராமல் இழுத்தடிப்பதுதான். ம.பி.யில் இதற்கு முன்பிருந்த முதல்வர் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு, பிரதமர் மோடியிடமும், குஜராத் அரசிடமும் சரணடைந்து விட்டது. அதனால், அந்த இழப்பீட்டை பெறாமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் விட்டு விட்டது.
இப்போது கமல்நாத் தலைமையிலான ம.பி. காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்த போதும், குஜராத் அரசு அதை பொருட்படுத்தவில்லை. அக்டோபர் 15ம் தேதிதான் சர்தார் சரோவர் அணையை முழுவதுமாக நிரப்புவதற்கு இறுதி நாள் என்றும், அது வரை நர்மதா ஆற்றில் தண்ணீர் போய் கொண்டிருக்கும் என்று குஜராத் அரசு முதலில் கூறியது. அதன்பிறகு, அதிக மழை பெய்வதை காரணம்காட்டி அதை செப்டம்பர் 30ம் தேதியாக மாற்றியது.
ஆனால், தற்போது பிரதமர் பிறந்த நாளுக்குள் அதை அவர் கொண்டாட வேண்டுமென்பதற்காக அணையை செப்.17ல் நிரப்பி விட்டனர். இதனால், ம.பி.யில் கிராமங்கள் மூழ்கி விட்டன. பிரதமர் ஒருவருக்காக ஆயிரக்கணக்கானோர் மூழ்கடிக்கப்படுகின்றனர். மறுவாழ்வு பணிகளை முடிக்காமல் அணையை நிரப்பியது சட்டவிரோதம்.
இவ்வாறு மேதாபட்கர் தெரிவித்தார்.
இதே போல், ம.பி. உள்துறை அமைச்சர் பாலாபச்சனும், பிரதமரின் பிறந்த நாளுக்காக அணையை அவசர, அவசரமாக நிரப்பி விட்டனர். மறுவாழ்வு பணிகளை முடிப்பதற்கான கால அட்டவணைக்காக காத்திருக்காமல் பிரதமருக்காக அணையை நிரப்பி விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.