பேனர் கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது.. ஸ்டாலின் பேட்டி

by எஸ். எம். கணபதி, Sep 18, 2019, 15:23 PM IST

விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த வாரம், சென்னையில் அ.தி.மு.க. பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற கம்ப்யூட்டர் இன்ஜினீயர் உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலையில் சென்று, சுபஸ்ரீயின் தாய், தந்தைக்கு ஆறுதல் தெரிவித்தார். இதன்பின்னர், நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:

திமுகவினர் யாரும் விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், காவல்துறையிலும் முறையாக அனுமதி பெற்று வைக்க வேண்டும். அப்படி விதிகளைமீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2017 ம் ஆண்டு கட்சியின் செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நேரத்திலேயே நான் அறிவித்தேன்.

ஆனால், ஆளும்கட்சியினர், உயர்நீதிமன்றம் உத்தரவையும் மீறி, பெயரளவிற்கு ஒன்றிரண்டு விளம்பரப் பலகைகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுக் கொண்டு, நூற்றுக்கணக்கான விளம்பரப் பலகைகளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வைக்கிறார்கள். எந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தாலும் வழிநெடுக போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு தரும் வகையில் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றமும் தொடர்ந்து இதுகுறித்து தன்னுடைய கண்டனத்தைத் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இந்த விளம்பரப் பலகைக் கலாச்சாரம், ஏற்கனவே கோவை மாவட்டத்தில் ரகு என்கிற சகோதரனைப் பலி கொண்டது. இப்போது சுபஸ்ரீ என்கிற ஒரு சகோதரியைப் பலி கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. சுபஸ்ரீயை இழந்து வாடும் அவருடைய பெற்றோருக்கு என்ன ஆறுதல் கூறினாலும், அவர்களுடைய மனது ஆறுதல் அடையாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அவருடைய தந்தை ரவி என்னிடத்தில், "விளம்பரப் பலகைகள் கலாச்சாரத்தால் என் மகள் இறந்துள்ளார். இதுவே கடைசியாக இருக்கட்டும். இது தொடரக் கூடாது, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று உணர்ச்சியோடு சொன்னதை மறக்க முடியாது. விளம்பரப் பலகை கலாச்சாரமே இனி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து.
சுபஸ்ரீ குடும்பத்தாருக்கு தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் ரூ.5 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Leave a reply