கர்நாடகாவுக்கு போய் ரஜினி கருத்து சொல்வாரா? திமுக எழுப்பிய கேள்வி..

by எஸ். எம். கணபதி, Sep 18, 2019, 15:26 PM IST

பொதுவான மொழி இருந்தால் நல்லது என்ற கருத்தை கர்நாடகாவில் போய் ரஜினி சொல்லுவாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டு வர முடியாது என்றும் ரஜினி கூறியிருக்கிறார்.

இது பற்றி, தென்சென்னை வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவே இல்லை. பாஜகவுக்கு எப்போது எல்லாம் பிரச்னை வந்தால் அப்ப மட்டும் அந்த கட்சிக்கு ஆதரவாக பேட்டி அளிப்பதே அவருக்கு வழக்கமாகி விட்டது. பொதுவான மொழி இருந்தால் வளர்ச்சிக்கு நல்லது என்று சொல்கிறாரே, இந்த கருத்தை அவர் கர்நாடகாவுல போய் சொல்லுவாரா? அங்கேயும் இந்திக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. அங்க போய் ரஜினி தைரியமாக கருத்து சொல்லுவாரா? அதே போல், இந்தி திணிப்பை ஏற்க மாட்டார்கள் என்றும் சொல்கிறார். வாழைப்பழத்துல ஊசி ஏத்தற மாதிரி நைசா பேசுகிறார்.

இந்தியை எதிர்க்கிறாரா, ஆதரிக்கிறாரா? இரண்டு பக்கமாக பேசக் கூடாது. முதல்ல அவர் அரசியலுக்கு வரட்டும், அப்பறம் அவர் பேசுவதைப் பார்ப்போம். இப்ப அவர் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார் என்று கூறியுள்ளார்.