பிகில் படத்தில் நடிகர் விஜய் கையில் கத்தி வைத்திருப்பது குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக விஜய் ரசிகர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்.
பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த தனியார் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விடை அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அது சட்டப்படி எடுக்கும் நடவடிக்கை என்றும் அதில், அரசியல் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
பின்னர், பிகில் பட போஸ்டர்களில் விஜய் கத்தியுடன் இருப்பது போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களையும் கத்தி வைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட தூண்டாதா என்றும் எம்.ஜி.ஆரை போல நடிகர்கள் படங்களில் நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
இந்த செய்தி அறிந்த விஜய் ரசிகர்கள், அப்போ எம்.ஜி.ஆர்., பல படங்களில் கத்தி சண்டையை எதை வைத்து போட்டார் என சமூக வலைதளத்தில் சீறி வருகின்றனர்.
ஆக்ஷன் ஹீரோக்கள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து நடிப்பது காலம் காலமாக இருந்து வரும் சூழலில் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து, நடிகர் விஜய்யை நேரடியாக சீண்டும் விதமாக உள்ளது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்படி பிகில் படத்திற்கு எதிராக ஆளும் அதிமுக அரசு நேரடியாகவே இறங்கி எதிர்ப்பதால், அது பிகில் படத்திற்கு விளம்பரமாக அமையுமா அல்லது படத்தின் ரிலீசுக்கு பிரச்னைகளை உண்டு பண்ணுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.