நடிகை பானுபிரியா, தம் மகளை வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் புகார் கூறியுள்ளார். சென்னை காவல்துறையை அணுகும்படி ஆந்திர போலீசார் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் சமல்கோட் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த பெண், சமல்கோட் காவல் நிலையத்தை அணுகி, தம்முடைய பெண்ணுக்கு 14 வயதாவதாகவும், அவர் கடந்த 18 மாதங்களாக சென்னையில் நடிகை பானுபிரியா வீட்டில் வேலை செய்து வருவதாகவும், பானுபிரியா குடும்பத்தினர் தம் மகளை காரணமேயில்லாமல் அடித்து, துன்புறுத்துவதாகவும் மனம் புண்படும்படி பேசுவதாகவும் புகார் கூறியுள்ளார்
. மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசி தம் மகளை அழைத்துச் சென்றுவிட்டு, இப்போது ஊதியம் கேட்கப் போனால் பணம் தர மறுத்து தம்மை தாக்க வருவதாகவும் அப்பெண்மணி தெரிவித்துள்ளார். சமல்கோட் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் நாயக், சென்னை காவல்துறை மற்றும் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அப்பெண்மணி, பானுபிரியா குடும்பத்தினர் தம் மகளை அனுப்ப மறுப்பதாகவும், 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, ஒன்றரை லட்சம் பெறுமானமுள்ள 30 கிராம் தங்க நகைகளை மகள் திருடி விட்டதாக பொய்யாய் குற்றஞ்சாட்டுகின்றனர். பானுபிரியா வீட்டில் கண்காணிப்பு காமிராக்கள் இருக்கின்றன. அவற்றின் பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பானுபிரியா தரப்பில், வேலைக்காரப் பெண் ஓராண்டுக்கு மேலாக பணி செய்து வருவதாகவும், ஐபாட், நகைகள், பணம் மற்றும் காமிரா ஆகியவற்றை திருடி தாயிடம் கொடுத்துள்ளதாகவும் விஷயம் தெரிந்ததும், செய்ததை ஒப்புக்கொண்டு ஐபாட் மற்றும் காமிராவை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நகை மற்றும் பணத்தை எடுத்து வருவதாக கூறியே பணிப்பெண்ணின் தாயார் கிளம்பிச் சென்றதாகவும், இப்போது ஏதோ காரணத்தால் புகார் கூறுவதாகவும் தெரிவித்த பானுபிரியா, தாம் 35 ஆண்டுகள் திரைத்துறையில் இருப்பதாகவும், அனைவரிடமும் நல்லமுறையில் பழகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பணிப்பெண் சுயவிருப்பத்தின்பேரிலேயே தம் வீட்டில் இருப்பதாகவும், சென்னை செய்தியாளர்களிடம் தம் தாய் வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளதாகவும், தம் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்களை திரும்ப பெறுவதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
பணிப்பெண்ணின் வயது பற்றிய கேள்விக்கு, அப்பெண் தம் வயதை தெரிவிக்கவில்லை என்று பானுபிரியா கூறியுள்ளார்.