வெளியானது பத்மாவத் - வெறித்தனமான வன்முறையில் இறங்கிய மதவெறி கும்பல்கள்

சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றைச் சொல்லும், பத்மாவத் படம், சங்-பரிவாரங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே, நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. படத்திற்கு அமோக வரவேற்பும் கிடைத்துள்ளது.

Jan 26, 2018, 08:57 AM IST

சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றைச் சொல்லும், ‘பத்மாவத்’ படம், சங்-பரிவாரங்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே, நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. படத்திற்கு அமோக வரவேற்பும் கிடைத்துள்ளது.

ஆனால், பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இப்படம் வெளியாவதை மிரட்டி தடுத்துள்ள சங்-பரிவாரங்கள், ராஜ்புத் கர்னி சேனா, சத்ரிய சமாஜ் உள்ளிட்ட சாதிய அமைப்புக்களைத் தூண்டிவிட்டு வன்முறையையும் அரங்கேற்றி வருகின்றன.

பத்மாவத்’ திரைப்படம் வெளியாவதற்கு எந்த தடையும் இல்லை; மாறாக, படத்திற்கு எதிராக சட்டம்- ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் நடக்கும் சம்பவங்களை தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருந்த நிலையிலும், பாஜக ஆளும் மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது.

தியேட்டர்கள் மீது தாக்குதல்; வாகனங்களுக்கு தீ வைப்பு:

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பத்மாவத் படம் வெளியாக இருந்த 3 தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 30 இருசக்கர வாகனங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

கடைகள் சூறை; சாலைகள் மறிப்பு:

ராஜஸ்தான் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் கும்பலாக சென்ற ராஜ்புத் கர்னி சேனாவினர், கடைகளை சூறையாடியதுடன், முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நடைபெறாதவாறு தற்போது வரை தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

சித்தோர்கார்க், துங்கார்பூர் மற்றும் பன்ஸ்வாரா உள்ளிட்ட பகுதிகளிலும் வன்முறைகள் அரங்கேறியுள்ளன. உதய்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களில் மட்டும் 20-க்கும் அதிகமான கடைகள் தாக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் பத்மாவத் படம் வெளியாக உள்ள தியேட்டரின் முன்பதிவு கவுண்ட்டருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அங்கு சரமாரியாக பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.

ஹரியானா மாநிலம் குருகிராமில் ஜி.டி. கோயங்கா பள்ளி மாணவர்கள் - மாணவியர், ஆசிரியர்கள் சென்ற பேருந்தையும் ராஜ்புத் அமைப்பினர் படுபயங்கரமாக கல்வீசித் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்கிறது என்பதை அறியாத சின்னஞ்சிறு குழந்தைகள், பேருந்துக்கு உள்ளேயே கதறித் துடிக்கும் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம் என்று,திரையரங்க உரிமையாளர்களின் சங்கமான ‘இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம்’ அறிவித்துள்ளது.

You'r reading வெளியானது பத்மாவத் - வெறித்தனமான வன்முறையில் இறங்கிய மதவெறி கும்பல்கள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை