பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா எழுதிய தமிழ் - சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா, கடந்த 22-ம் தேதி சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமி அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, காஞ்சி சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது, அப்போது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர், ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது, அப்போது மட்டும் அவர் எழுந்து நின்றார்.
இந்த காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பானது, இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழுக்கு நேர்ந்த அவமரியாதையாக கருதி, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதுபற்றிய தனது எதிர்ப்புகளை தொடர்ந்து வெளிப்படுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்த சங்கர மடம், “சர்ச்சைக்குள்ளான அந்த நிகழ்ச்சி தனியார் நிகழ்ச்சி என்பதால், இறைவணக்கம்தான் போட்டிருக்கவேண்டும், ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துப் போட்டார்கள் என்று தெரியவில்லை, தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம், தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா.?'' என்று கேள்வி எழுப்பியது. இது மேலும் தமிழுணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும், ஆண்டாளை விமர்சித்ததற்கு, வைரமுத்துவை மன்னிப்பு கேட்க சொல்லி போராடியதை சுட்டிக்காட்டி, தமிழன்னையை இழிவு படுத்தியதற்காக, விஜயேந்திரரும் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தற்போது(ம்) ஒரு பிரச்சனையை கிளப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை" என்று கூறி வீடியோ ஒன்றையும், புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
முதலாவது காணொளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது கருணாநிதி அமர்ந்திருப்பது போன்றும், அடுத்த புகைப்படத்தில் கருணாநிதி நின்றிருப்பது போன்றும் பதிவிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
விஜயேந்திரரை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஹெச்.ராஜா இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என்றும், உடல் நலக்குறைவால் எழுந்து நிற்கமுடியாத கருணாநிதியை விஜயேந்திரரோடு ஒப்பிடுவதா என்றும், சமூக வலைதளங்களில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதன்மூலம் ஹெச்.ராஜா பலரது எதிரப்புகளை ஒருசேர சம்பாதித்து வருகிறார். ‘மத உணர்வுகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் பண்பு இவரிடம் கொஞ்சம் அதிகரித்துள்ள’தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை ஒரு தமிழரே அல்ல என்றும், அவர் கிறிஸ்தவ மிஷனெரிகளின் கைகூலி என்றும், ஒரு கிறிஸ்தவ பெயரை குறிப்பிட்டு, இதுதான் மனோன்மணியத்தின் இயற்பெயர் என்றும், ஹெச்.ராஜாவைப் போலவே, ஹெச்.ராஜாவுக்கு சிலர் ஆதரவு குரலும் கொடுத்து வருகிறார்கள்.
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவோம்’ என்பது போன்ற குரல்களும் தமிழகத்திலே ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அதுபோல், சமீப காலமாக கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான வெறுப்பு அரசியல் மேலோங்கி வருகிறது. இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல என்பதையும், இதுபோன்ற பிரச்சனைகள் தமிழர்களை பிரிக்குமே தவிர, ஒன்றுபட உதவாது என்பதையும் ஹெச்.ராஜா போன்றோர் சிந்திக்க வேண்டும்.