நண்பர் ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலும் மணமகனாக இருக்கிறார். விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெறவிருக்கிறது.
சமீப சில காலங்களாக விஷால் எங்கு தோன்றினாலும் அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி எப்பொழுது திருமணம் என்பது தான். அதற்கான விடையை கடந்த ஜனவரியில் அறிவித்தார் விஷால். விஷாலுக்கும் ஆந்திர தொழிலதிபரின் மகளான அனிஷாவுக்கும் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. முன்னதாக, இருவருக்குமான நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. தொடர்ந்து இருவரின் திருமணமும் ஆகஸ்ட் மாதம் விமரிசையாக நடக்கவிருக்கிறது.
விஷால் ஏற்கெனவே, தன்னுடைய திருமணம் சங்க கட்டிடத்தில் தான் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் டி.நகரில் தயாராகிவரும் நடிகர் சங்க கட்டிடம் பாதியளவே முடிந்திருக்கிறது. மலேசியா கலைநிகழ்ச்சி, நட்சத்திர கிரிக்கெட் போட்டி என இதுவரை 25 கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டிவிட்டாலும் சங்க கட்டிடத்தை முழுமையாக முடிக்க இன்னும் 10 கோடி ரூபாய் தேவையாம். அதற்காக கோவையில் நட்சத்திர திருவிழா, நட்சத்திர கிரிக்கெட் உள்ளிட்டவற்றை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியும் நிதி முழுமையாக திரட்டப்படவில்லை என்றால் மீண்டும் வெளிநாட்டில் நட்சத்திர கலைவிழா நடத்தினால் மட்டுமே நிதி திரட்டுவது சாத்தியம். இவையெல்லாம் நடக்க எப்படியும் பல மாதங்கள் பிடித்துவிடும். ஆகஸ்ட் மாதம் திருமணம் என்று அறிவித்த விஷாலின் திருமணம் சங்க கட்டடத்தில் நடக்குமா என்பது இப்போது கேள்விக்குறியாக நிற்கிறது.
தவிர, திருமணத்தை தள்ளிப் போட இருவீட்டாரும் சம்மதிக்கவும் தயாராக இல்லை. இதற்கு நடுவே சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிடலாமா என்று யோசித்துவருகிறாராம் விஷால். ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நினைத்து, விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட தவறினால் போட்டியிட முடியாமல் போனது. அதனால் இந்த முறை எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாமா என்றும் யோசித்து வருகிறாராம் விஷால். இவரின் இந்த முடிவுக்கு வீட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். ஏனெனில் பெரிய இரண்டு கட்சியில், ஏதேனும் ஒரு கட்சி தான் ஜெயிக்கும். இதில் நீ போட்டியிட்டு காசினை வீணாக்க வேண்டாம் என்று கரார் காட்டுகிறார்களாம் விஷாலின் குடும்பத்தார். ஆனால் விஷாலோ ரஜினி, கமல் உதவியுடன் ஏதேனும் தொகுதியில் நின்று விடலாமா என்றும் யோசித்துவருகிறாராம். இப்படி பல பிரச்னைகளுக்கு நடுவே விஷாலின் திருமணம் சங்க கட்டடத்திலா இல்லை பிரம்மாண்டமான வேறு ஏதேனும் பகுதியிலா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆக, விஷாலின் சங்க கட்டிட சபதம் நிறைவேறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.