மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் பவன் கல்யாண்.
ஆந்திராவின் முன்னணி நடிகரும் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். இவரின் சொந்த அண்ணன் ஆந்திர மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவி. பவன் கல்யாண் ஆளும் ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பின் ஆளும் கட்சியை மட்டுமில்லாமல் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்து வந்தார். இப்போது இவரின் ஜனசேனா கட்சி மூலம் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
ஆந்திராவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது கட்சியை தயார்ப்படுத்தி கொண்டிருக்கிறார் பவன். தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு ஆந்திராவில் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கவுள்ளது எனப் பேசப்பட்டது. ஆந்திர முதல்வர் வேட்பாளராகப் பவன் கல்யாணை முன்னிறுத்தவும் பா.ஜ.க தயாராக இருந்ததாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பவன் கல்யாண் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறினார் . மேலும் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி தொடரும் எனக் கூறினார் . ``அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். மாயாவதி ஜி பிரதமராக வேண்டும் ,எங்கள் விருப்பம் வரும் நாட்களில் நிறைவேறும்" என்றும் பவன் கூறினார் .இதன் பின்னர் பேசிய மாயாவதி, "பவன் கல்யாண முதல்வராக வேண்டும். அதுவே எனது ஆசை. ஆந்திராவில் அரசியல் மாற்றம் வேண்டும். புதிய இளம் ரத்தங்கள் அரசியல் களத்துக்கு வர வேண்டும்" என்றார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பா.ஜ.க, பவன் கல்யானை இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டது. ஆனால் அவரோ மாயாவதியுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.மேலும் பவனின் கட்சியில் கம்யூனிஸ்ட் மற்றும் சில உதிரிக் கட்சிகள் சேரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் தனித்துத் தேர்தலைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பா.ஜ.க.