'லவ் குரு’ ஆக அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.ஜே ராஜவேல் நாகராஜன். இவர் சமூக செயற்பாட்டாளராகவும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். கஜா புயல் பாதிப்பின்போது வேதாரண்யத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்குக் களத்தில் இறங்கி உதவி செய்தார். தேவைப்படும் உதவிகளைப் பற்றி தன் முகநூலில் பதிவிட்டு வந்தார். இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பண உதவிகளும் கிடைத்தன.
ஃபேஸ்புக்கில் தொடர்ந்து சமூக பிரச்னைகள்குறித்து எழுதி வருகிறார். தற்போது புனித ஸ்தலம் காசியில் டாக்குமென்டரி ஷூட்டிங்கில் இருக்கிறார். காசி பற்றிய இவரின் சமீபத்திய ஃபேஸ்புக் பதிவு அனைவராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
''கடந்த 8 நாட்களாக வாரணாசியில், காசி பற்றிய ஒரு டாக்குமென்டரி ஷூட்டிங்கில் இருக்கிறேன். மனிதர்களைப் பற்றிய, வாழ்க்கையை பற்றிய, மரணத்தைப் பற்றிய அபிப்ராயங்களை இந்த 8 நாட்கள் நிறையவே மாற்றியிருக்கிறது. இந்தப் போட்டோவில் இருக்கும் கைகள், மங்கள் சுக்லாவுடையது. காசியில் தினம் குவியும் ஆரத்தி மலர்களை, ஆடைகளை, குப்பைகளை, அசுத்தங்களை சுத்தப்படுத்தும் கைகள். இன்னும் சொல்லப்போனால் புண்ணிய நதியாம் கங்கையின் தூய்மையை / புனிதத்தை காக்கும் அழகான கைகள். தண்ணீரில் ஊறி, ஊறி, காயங்களோடு, வெடிப்புகளோடு, இருந்தது. கண்ணீரோடு இறுகப்பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டேன்’’ என்று புகைப்படத்துடன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.
நம் அன்றாட பிஸி வாழ்க்கையில் மங்கள் சுக்லா போன்ற உன்னத மனிதர்களைக் கவனிக்க மறந்துவிடுகிறோம். இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ராஜவேலின் முகநூல் பதிவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.