'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அவரின் பேச்சுக்கு நயன்தாராவின் காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் டுவிட்டரில் தன் ஆதங்கத்தை தெரிவித்தார். கூடவே அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் எனவும் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். சம்பவத்தை உணர்ந்து ஸ்டாலின் ராதாரவி கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இந்த சர்ச்சை ஓயும் முன் இதே பிரச்னையை மையப்படுத்தி இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. நயன்தாராவை இழிவாக பேசிய ராதாரவி குறித்து நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதில், ``தங்கள் பாதுகாப்பற்ற நிலை கருதி மீடூ விவகாரத்தில் குரல் கொடுக்காமல் மௌனம் காத்த எந்த ஒரு பெண்ணும், மீடுவை புறக்கணித்த ஆண்களை விட குற்றவாளிகள்; ஒவ்வொருவரும் பாலின பேதமின்றி குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தான் அநியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள் என்றால் அது துணிச்சலே அல்ல. பாதுகாப்பற்ற உணர்வால் பலம் பொருந்திய பெண்கள்கூட மீ டூ பற்றி பேசாமல் இருந்தீர்கள் என்றால் நீங்களும் குற்றவாளிகள்தான். மீ டூ இயக்கத்தைப் பற்றி ஆணாதிக்க சிந்தனையுடன் பேசியவர்களுக்கு நிகரானவர்தான் நீங்களும்” என நயன்தாராவை குறிப்பிட்டு சாட்டியிருந்தார்.
இதற்கு தற்போது விக்னேஷ் சிவன் பதில் கொடுத்துள்ளார். அதில், ``சமூக வலைத்தளங்களில் மெளனம் காத்தால் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என ஆகிவிடாது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு நயன்தாரா என்றுமே குரல் கொடுத்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பான, சவுகரியமான பணிச்சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படையாக தனது திரைப்படங்களில் ஆதரித்துப் பேசியுள்ளார். அதன் தாக்கம் ட்விட்டரை விட அதிகம். பல பெண்களுக்கு ஆதரவு கொடுத்து உதவிகள் செய்துள்ளார். மீடுவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கொடுப்பது என பல பணிகளை அவர் செய்துள்ளார். சில காரணங்களுக்காக அவர் எதையும் வெளியுலகுக்கு காட்டிக் கொள்ளவில்லை.
ஒரு பெண்ணுக்கு எதிராக இழி கருத்துகளை பேசியிருக்கிறார் என்ற பெரிய பிரச்சினையைக் கொண்டு வரும்போது, அதனைப் பார்க்காமல் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். வலைதளங்களில் அமைதியாக இருப்பவர் எப்படி தீர்மானிக்கப்படுகிறார் என்பதைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது" எனக் கடுமையாக பேசியிருந்தார். இவரின் கருத்தை அடுத்து தனது ட்வீட்களை நீக்கிய சித்தார்த், ``எனது முந்தைய ட்வீட்டுகள் நான் என்ன நினைக்கிறேன் என்பதை தெளிவாகச் சொல்லவில்லை. பெண்களின் மீதுள்ள மரியாதையாலும், பாதிக்கப்பட்டவர்களின் மீதுள்ள மரியாதையாலும் அந்த ட்வீட்டுகளை நீக்குகிறேன்" எனக் கூறியுள்ளார். ராதாரவியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மோதிக்கொண்டது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.