செம்ம படம்.. ஆனா ஒரு இடத்தில் எதார்த்த மீறல் … சர்ச்சை வசனம் - சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

Vijay Sethupathi, Samantha and more - Super Deluxe Review

by Sakthi, Mar 30, 2019, 11:17 AM IST

‘உன் சரி வேற எவனுக்கோ தப்பா இருக்கலாம். உன் தப்பு வேற எவனுக்கோ சரியா இருக்கலாம். மொத்தத்துல இங்க சரி, தப்புனு எதுவுமே இல்லை. நடுவுல வந்த நாம தான் எதேதோ உலறிட்டு இருக்கோம்...’ இதைத்தான் நான் லீனியராக சொல்லுகிறது சூப்பர் டீலக்ஸ். ‘ஆரண்யகாண்டம்’ என்ற ஆகச்சிறந்த படைப்பை தந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, எட்டு வருடம் கழித்து இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். 

சூப்பர் டீலக்ஸ்

படத்துக்கான கதை என்னவென்று கேட்டால், அதை ஒன்லைனில் சொல்லிவிட முடியாது. பல கதைகளின் கோர்வையும், அது சந்திக்கும் இடங்களின் சுவாரஸ்யமுமே சூப்பர் டீலக்ஸ். திருநங்கையான விஜய்சேதுபதியின் வாழ்க்கை, ஆண்டவரின் வலதுகரமான மிஷ்கினின் ஜெபவீடு, ஆபாச நடிகை ரம்யாகிருஷ்ணன், ஐந்து பசங்களின் கதை, பகத் பாசில் - சமந்தாவின் ரிலேஷன்ஷிப் என ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றொருவரின் வாழ்க்கையோடு கதையாக பிண்ணப்பட்டு, சொல்லப்பட்டிருக்கிறது சூப்பர் டீலக்ஸ். சரி, படத்தின் கதையை மூன்று கதைகளாகப் பிரிக்கலாம்.

கதை 1: வீட்டின் கட்டாயத்தால் காதலனை மறந்துவிட்டு, வீட்டில் பார்க்கும் பகத் பாசிலை திருமணம் செய்துகொள்கிறார் சமந்தா. இந்நிலையில் பழைய காதலன் போன் செய்து, விட்டிற்கு அழைக்கிறார் சமந்தா. இருவரும் உடலுறவில் ஈடுபட, திடீரென அவன் இறந்து விடுகிறான். அவனை ஃபிரிட்ஜில் மறைத்து வைக்கிறார் சமந்தா. வீட்டுக்குள் வரும் ஃபகத் ப்ரிட்ஜை திறந்தால் உள்ளே ஓர் பிணம் இருக்க, அதை மறைக்க இருவரும் கிளம்புகிறார்கள். ஆனால் இன்ஸ்பெக்டர் பக்ஸிடம் மாட்டிக் கொள்கிறார்கள். 

கதை 2: பள்ளிக்கு மட்டம் போடும் ஐந்து சிறுவர்கள், நண்பனின் வீட்டில் ஆபாசப் படம் பார்க்க தயாராகின்றனர். படத்தைப்  போட்டுப் பார்த்தால் அந்தச் சிறுவனில் ஒருவனின் அம்மா அந்தப் படத்தில் நடித்திருக்கிறார். கோவமடையும் சிறுவன் டிவியை உடைத்து விட்டு, அம்மாவை கொலை செய்ய கிளம்புகிறான். அந்த பையனின் தந்தை தான் இறைவனின் வலதுகரமான அற்புதம் (மிஷ்கின்). கடவுள் மட்டுமே இந்த உலகில் அனைத்துக்கும் மருந்து. அவரை அஞ்சாமல் நம்ப வேண்டும் என்கிறார். மிஷ்கினிடம் பாவ மன்னிப்பு கேட்க சந்திக்கிறார் ஷில்பாவாக இருக்கும் விஜய்சேதுபதி. 

கதை 3: மனைவி காயத்ரியை விட்டு விட்டு, ஓடிப் போகிறான் கணவன் மாணிக்கம் (விஜய்சேதுபதி). ஆறு வருடங்கள் கழித்து மனைவி, குழந்தையை பார்க்க வருகிறார் விஜய்சேதுபதி. ஆனால் ஆணாக இல்லை, திருநங்கையாக. அதிர்ந்துவிடுகிறது குடும்பம். ஆனால் விஜய்சேதுபதியின் மகன், பொண்ணோ, ஆணோ அப்பா இருந்தால் போகும் என்கிறான். அப்பா மாணிக்கம் இப்போது ஷில்பா. அப்பாவான ஷில்பாவை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த பள்ளிக்கு கூட்டிச்செல்கிறான் மகன். அப்போது இன்ஸ்பெக்டர் பக்ஸிடம் மாட்டிக்கொள்கிறான். 

இந்த மூன்று கதையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பின்னப்பட்டிருக்கும் கதையே சூப்பர் டீலக்ஸ். கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் இடங்களிலேயே தன்னுடைய வித்தியாசங்களை தொடங்கிவிடுகிறார் தியாகராஜா. நிறைய நடிகர்கள் நடிக்கும் போது அனைவருக்கும் முக்கியத்துடம் தருகிற கேரக்டர்களை தருவது ரொம்பவும் கஷ்டம். ஆனால் படத்தில் ஒரு காட்சியில் வந்துபோகும், ஆட்டோ டிரைவருக்கு கூட அட்டகாசமான ரோல் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப்  படத்தின் திரைக் கதையை தியாகராஜாவோடு மிஷ்கின், நலன் குமாரசாமி,  நீலன் கே.சேகர் இணைந்து எழுதியுள்ளனர். ஒரு கதை, மற்றொரு கதையோடு எப்படி இணையும் என்கிற இடத்தில் திரைக்கதையில் விளையாண்டிருக்கிறார் தியாகராஜா. 

இந்தப் படத்தை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று பின்னணி இசையோடு மற்றொன்று ஒலியமைப்போடு.  ஏனெனில் யுவனின் பின்னணி இசை படத்துக்கு ஒரு கதையை தருகிறது. தபஸ் நாயக்கின் ஒலியமைப்பு கதைக்கு வேறு வித உணர்வை தருகிறது.  பி.எஸ்.வினோத், நிரவ் ஷா என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படத்துக்கு. ஒளிப்பதிவும், சத்யராஜின் எடிட்டிங்கும் படத்துக்கு பலம். சில இடங்களில் ஒரே ஷாட்டில் காட்டப்பட்டிருக்கும் இடங்கள் க்ளாசிக். 

பகத்ஃபாசில், சமந்தா, விஜய்சேதுபதி, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், ஐந்து பசங்கள் என நடித்த அனைவருமே தங்களுடைய சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் பகத் பாசில் கதையிலும், விஜய்சேதுபதியின் கதையின் நீளத்தையும் இன்னும் குறைத்திருக்கலாம். இன்ஸ்பெக்டர் பக்ஸின் நடிப்பு முதலில் நன்றாக இருந்தாலும் போக போக ஓவர் டோஸாகிறது. சாதி என்று சொன்னா தப்பு, ஆனா மொழி ரீதியா, நாட்டு பற்றுனு பிரிந்து இருக்கலாமா என் சர்ச்சைக்குரிய பல விஷயங்களையும் பேசுகிறார்.  வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும் போது, பிணத்தை வெட்ட முயல்கிறார்கள் ஃபகத்தும் சம்ந்தாவும். அது எதார்த்த மீறலாக நம்ப இயலாத விஷயமாக இருகிக்கிறது.  படம் எந்த காலக்கட்டத்தில் நடக்கிறது என்பதிலும் தெளிவில்லை.  முதல் படமான ஆரண்ய காண்டம் படத்துக்கான ரெஃபரன்ஸை இந்தப் படத்தில் வைத்திருக்கிறார். 

‘ஒருநாள் தாலியைக் கட்டிட்டு தினம் தினம் என் தாலிய அறுக்குறான்’, ‘செருப்பை மாத்திப் படைச்சுட்டான்’ ‘நீ ஆம்பளையாவோ, பொம்பளையாவோ இரு. ஆனா, எங்க கூடவே இரு’, என்பது போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. 

இந்த உலகத்துல சரி, தப்புனு எதுவும் இல்லை. அது பார்வையில் தான் இருக்கிறது. நாம செய்யுற ஒரு விஷயம் மற்றவருக்கு வேற விதமான விளைவாக இருக்கும். அதை கச்சிதமாக, வித்தியாசமாக சொல்லியிருக்கிறது சூப்பர் டீலக்ஸ். சிலருக்கு படம் பிடிக்கலாம், பலருக்கு படம் பிடிக்காமல் போகலாம். ஆனால் நிச்சயம் சூப்பர் டீலக்ஸ் ஒரு வித்தியாசமான ஒரு சினிமா. படத்தை தந்த விதத்தில் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. ஆரண்யகாண்டம் படத்தைப் பேசியது போல, இன்னும் பல வருடங்களுக்கு பேச அத்தனை விஷயங்கள் படத்தில் இருக்கிறது. 

You'r reading செம்ம படம்.. ஆனா ஒரு இடத்தில் எதார்த்த மீறல் … சர்ச்சை வசனம் - சூப்பர் டீலக்ஸ் விமர்சனம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை