நகைச்சுவை நடிகர் விகேக், தான் எந்த அரசியல் கட்சி அமைப்பிலும் இல்லையென்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழ் திரைத்துறை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரம் நடிகர் விவேக். சமூகத்தில் பரவியிருக்கும் லஞ்சம், மூட நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, அரசியல் உழல்கள் போன்ற பல கருத்துகளைத் தனது நடிப்பின் வாயிலாக எடுத்துரைத்து வருகிறார். தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசு விழிப்புணர்வு விளம்பரங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.
சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞர், பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகள் இவரின் நடிப்பிற்கு கிடைத்த கவுரவம். நடிப்பு மட்டுமல்லாமல், ‘பசுமை காலம்’ என்ற திட்டத்தில், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் விவேக்.
இந்நிலையில், விவேக் குறித்த அரசியல் ரீதியான வதந்திகள், சமூக வலைதளங்களில் அதி வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள விவேக், இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது, நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.