தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநராகவும், காலம் தாண்டியும் நிலைத்து நிற்கும் கிளாசிக் திரைப்படங்களை கொடுத்தவராகவும் இருந்தவர் இயக்குநர் மகேந்திரன்.
மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு உள்ளிட்ட படங்கள் யதார்த்த சினிமாவாக செல்லுலாய்டில் வெளியாகி, ரசிகர்களை பிரம்மிக்கவைத்தது. குறிப்பாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்மொழி, மகேந்திரனின் வழியாகவே ரஜினிக்கு வந்தது. முள்ளும் மலரும் திரைப்படத்தின்போது சொல்லிக் கொடுத்தவற்றை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்ட ரஜினி, பின்னாளில் அதையே தனக்கான பாணியாகவும் மாற்றிக் கொண்டார்.
இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் சமீபத்தில் பிரபலமானார். விஜய்யுடன் தெறி படத்தில், ரஜினியுடன் பேட்ட படத்தில், உதயநிதி ஸ்டாலினுடன் நிமிர் படத்திலும் நடித்திருந்தார்.
தமிழ் சினிமாவை அடுத்தடுத்த தளங்களுக்கு முன்னேற்றிய இயக்குநருக்கு கடந்த வாரம், சிறுநீரகப் பிரச்னை இருந்ததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பெற்றார். நேற்றிரவு உடல்நிலை மோசமாகி, கவலைக்கிடமானது. இந்நிலையில் மகேந்திரனின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தது. மகேந்திரனுக்கு வயது 79. அவரின் மரணம் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பு!
அவரின் நாராயணபுரம் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்காக அவரின் திருவுடல் இன்று காலை 10 மணி முதல் வைக்கப்படுகிறது. பிறகு, மாலை 5 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருக்கிறது.