நண்பர்களின் துணையோடு வெளியான ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை ஜெயித்ததா?

Natpe Thunai Movie Review

by Mari S, Apr 4, 2019, 00:00 AM IST

யூடியூப் நண்பர்களின் துணையோடு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நட்பே துணை படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போமா..

யூடியூபராக அறிமுகமாகிய ஹிப்ஹாப் ஆதி இண்டிபெண்டண்ட் மியூசிக் மூலம் பல இளம் ரசிகர்களை தன்வசப் படுத்தினார். பின்னர், சுந்தர்.சியின் ஆம்பள படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, தனி ஒருவன் படத்துக்கு சிறந்த இசையை அமைத்துக் கொடுத்து அசத்தினார்.

பின்னர், சுந்தர்.சியின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஆதியே இயக்கி நாயகனாகவும் அறிமுகமான மீசையை முறுக்கு படம் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில், சுந்தர்.சியின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள நட்பே துணை இன்று வெளியாகியுள்ளது.

மீசையை முறுக்கு வெற்றியால், காலை 5 மணி சிறப்புக் காட்சி நட்பே துணை படத்திற்கு கிடைத்தது.

திருவிழா போல படத்தின் ட்ரெய்லர் இருந்ததாலும், பல யூடியூப் நட்சத்திரங்கள் மீசையை முறுக்கு படத்தைப் போலவே இதிலும் நடித்திருந்ததாலும், இளைஞர்கள் கூட்டம் காலையிலேயே தியேட்டர்களை திருவிழாக் கோலமாக மாற்றின.

படம் எப்படி இருக்கு?

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையான வர்த்தக அரசியல் தான். இந்தியாவின் தேசிய விளையாட்டாக கருதப்படும் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து, அதில் உள்ள சுவாரஸ்யங்கள் மற்றும் அதன் பாசிட்டிவ் விஷயங்களையும், விளையாட்டுத் துறையில் கலக்கப்படும் அரசியலையும் சமமாக கலந்து திரைக்கதையை உருவாக்கியுள்ளனர்.

பிரபாகரன் எனும் பெயரில் அறிமுகமாகும் ஆதி, பாண்டிச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதையே தனது வாழ்வின் லட்சியமாக வைத்து இருக்கிறார்.

அது விஷயமாக காரைக்கால் செல்லும் அவர், ஹாக்கி வீராங்கனையான தீபா (அனகா) மீது காதல் கொள்கிறார். ரிட்டயர்டு மிலிட்ரியான சண்முகம் அங்குள்ள ஒரு மைதானத்தில் உள்ளூரில் இருக்கும் வீரர்களுக்கு ஹாக்கி விளையாட்டை கற்றுக் கொடுக்கிறார்.

அந்த இடத்தை கார்ப்ரேட் அதிகாரிகள் குறி வைக்க, அந்த இடத்தை காலி செய்யும் பணியில் லோக்கல் அரசியல்வாதியான ஹரிசந்திரன் (கரு. பழனியப்பன்) நுழைகிறார். இந்த போராட்டத்தில், ஹாக்கி மைதானத்தை கார்ப்ரேட் கைகளுக்கு செல்லாமல், காப்பாற்றும் முயற்சியில் ஹிப் ஹாப் ஆதி செய்யும் முயற்சிகள் வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.

வில்லனாக நடித்துள்ள கரு. பழனியப்பன், “நான் பெரிய வில்லன் இல்லப்பா.. சாதாரண அரசியல்வாதி” என சொல்லும் வசனம் மற்றும் அவரது நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

மீசையை முறுக்கு படத்திலேயே மாஸ் காட்டிய ஹிப் ஹாப் ஆதி, மேலும், தனது மாஸ் வித்தையை இந்த படத்தில் அதிகமாகவே காட்டியுள்ளார்.

ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், தோனியின் ரெஃபரன்ஸ் வைத்தது ரசிகர்களை கவரும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஹாக்கி மைதானத்திற்கு அங்குள்ள அரசியல்வாதிகளால் ஏற்படும் லோக்கல் பாலிடிக்ஸை ஹீரோ எப்படி ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை.

ஆனால், கமர்ஷியல் படம் என்பதாலும், சுந்தர்.சியின் தயாரிப்பு படம் என்பதாலும், இந்த படத்தில் எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகளும் நிறைந்து இருக்கின்றன.

லாஜிக் ஓட்டைகளை மறக்கடிக்கும் விதமாக படத்தின் வசனங்களும், நண்பர்களின் அட்டகாசமும் அங்கங்கே மேக்கப் செய்யப்பட்டு, படத்தை ரசிக்கும்படியாக வழங்கியுள்ளனர்.

மீசை முறுக்கு படத்தையும் நட்பே துணை படத்தையும் ஒப்பிட்டால், நட்பே துணை சற்று பின் தங்கியே உள்ளது.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் முன்னதாக வெளியான ஆத்தாடி என்ன உடம்பு மற்றும் எங்க ஸ்டேட்டு கேரளம் ஆகிய பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில், படத்திற்கு அந்த பாடல்கள் கூடுதல் பலத்தையே கொடுத்துள்ளன.

யூடியூபர்களான ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், எருமைசாணி விஜய், சுட்டி அரவிந்த், ராஜமோகன், ஷாரா, பழைய ஜோக் தங்கதுரை என பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட ரோலை சிறப்பாக செய்துள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதியின் மாமாவாக வரும் நடிகர் பாண்டியராஜன், இந்த படத்தில் தனது பழைய குறும்புத் தனத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலத்தையும், கலர்ஃபுல் காட்சிகள் நிறைந்த ஒளிப்பதிவாகவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டுகின்றது.

சினி ரேட்டிங்: 3.25/5.

 

You'r reading நண்பர்களின் துணையோடு வெளியான ஹிப்ஹாப் ஆதியின் நட்பே துணை ஜெயித்ததா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை