தேர்வு முறைகேடு: 132 மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது – அண்ணா பல்கலை அதிரடி

anna university stop the graduation to 132 students

by Suganya P, Apr 4, 2019, 11:00 AM IST

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற  ‘அரியர்ஸ்’ தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றி வைத்து, முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார்.

குழு நடத்திய விசாரணையில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட 7 மண்டலங்களை சேர்ந்த 37 தற்காலிக பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் தேர்வு ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷ் என்ற விரிவுரையாளரும் உடந்தையாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இது சம்மந்தமாக  பட்டியலைப்  பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்குழு வழங்கியது. இதைத் தொடர்ந்து, அந்த 37 தற்காலிக பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதோடு, தனியார் கல்லூரி விரிவுரையாளர் சுரேஷ்-க்கு எந்த கல்லூரியிலும் பணி வழங்க கூடாது என அண்ணா பல்கலை கடந்த மார்ச் 3-ம் தேதி ஆணை பிறப்பித்து.

அதேபோல், தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய 132 மாணவர்களிடம் விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. அந்த மாணவர்கள் தேர்வு எழுதிய கல்லூரிகளின் நிர்வாகத்திடமும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.  

இந்நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய 132 மாணவர்களுக்கும் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் அரியர்ஸ் வைத்துள்ள பழைய மாணவர்கள் ஆவர்.

You'r reading தேர்வு முறைகேடு: 132 மாணவர்களுக்கு பட்டம் வழங்க முடியாது – அண்ணா பல்கலை அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை