சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலானது. இந்தக் கூட்டணி எப்படி சாத்தியம் என்பதே பலரின் கேள்வியும் கூட.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி63 படத்தின் படப்பிடிப்பு சென்னையின் நடந்து முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக, பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு செய்தியும் பரவியது. ஆனால் ஷாருக்கான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் எப்படி ஷாருக்கான் - அட்லீ கூட்டணி சாத்தியம் என்பதே பலரின் கேள்வியும்.
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படம் வெளியான நேரத்தில் அதன் இந்தி ரீமேக்கான ரோபோட் படத்தில் ஷாருக்கான் தான் நடிக்க இருந்தது. தவிர, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கவும் இருந்தது. அந்த நேரத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லீ. அப்பொழுது ஷாருக்கானுடன் பேசுவதற்கான வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அந்த நட்பு இன்று வரை தொடர்வதாக சொல்கிறார்கள். அதுமட்டுமின்றி, அட்லீயின் மெர்சல் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். அதனால் தான் கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக் சென்னை வந்த சமயத்தில் அட்லீயை அழைத்திருக்கிறார். பிஸியான ஷூட்டிங் நேரத்திலும் ஷாருக்கை சந்தித்து, அவருடன் கிரிக்கெட் மேட்சை பார்த்து மகிழ்ந்திருக்கிறார் அட்லீ.