உலகளவில் 20 ஆயிரம் கோடி வசூலை தாண்டி ராட்சத வசூல் வேட்டையை நிகழ்த்தி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேன் கிளைமேக்ஸில் இறந்துவிடும் காட்சி ரசிகர்களை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
மார்வெல் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் மீண்டும் மார்வெல் படங்களில் அயன்மேன் கதாபாத்திரம் திரும்பி வருமா? என்பது மட்டுமே, இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பட இயக்குநர்களின் ஒருவரான ஜோ ரூஸோ தனது ஆழமான பதிலை கூறியுள்ளார்.
தானோஸ் மற்றும் உலகை அழிக்கும் அவனது படையை அழிக்க தனது உயிரை தியாகம் செய்த டோனி ஸ்டார்க் எனும் அயன்மேன் கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்தால் அது அவரது கதாபாத்திரம் செய்த தியாகத்துக்கு செய்யும் துரோகமாக மாறிவிடும். அயன்மேன் இனி வரமாட்டார் என உறுதியாக கூறியுள்ளார் ரூஸோ.
அயன்மேன் முதல் பாகத்தில் தொடங்கப்பட்ட மார்வெல் உலகின் 22 படங்களுக்காக கிளைமேக்ஸ் படமாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வந்துள்ளதாகவும், 11 ஆண்டுகாலமாக ரசிகர்களின் அன்பை கவர்ந்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் மார்வெல் உலகின் இதயமாக செயல்பட்டார் என்றும் ரூஸோ கூறினார்.
அயன்மேனை விட சக்தி வாய்ந்த பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், தனது புத்திக் கூர்மையால் எதிரிகளை அழிக்க போராடும் சூப்பர் ஹீரோக்களுக்கெல்லாம் சூப்பர் ஹீரோ என்றுமே அயன்மேன் தான்.