செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
முதல் பாகத்தில் ஒரு பேயின் அட்டகாசம் என்றால், தேவி 2வில் டைட்டிலுக்கு ஏற்றார் போல் 2 பேய்கள் அட்டகாசம் செய்யவுள்ளன. ஆனால், இதில் அந்த இரண்டு பேய்களும் தமன்னாவுக்கு பதில் பிரபுதேவா உடம்பில் ஏறி அட்டகாசம் செய்வது தான் ஹைலைட்.
ராகவா லாரன்ஸ் ஸ்டைலில் பிரபுதேவாவும் காமெடி கலந்த ஹாரர் ஜார்னரில் இறங்கியுள்ளார். தேவி படம் நல்ல வரவேற்பை அளித்த நிலையில், தேவி 2 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், சூர்யாவின் என்ஜிகே படம் ரிலீசாகும் மே31ம் தேதி படம் வெளியாவதால், தேவி 2 படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.
அதே போல சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படமும் வரும் மே 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் இந்தி பதிப்பான காமோஷி படமும் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. காமோஷி படத்திலும் பிரபுதேவா, தமன்னா நடித்திருப்பது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.