சந்தானம் நடித்த ஏ1 என்ற திரைப்படத்தை யாரும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று பிராமணம் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஏ1. ராஜநாராயணன் தயாரிப்பில் ஜான்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிராமணர்களை அவமானப்படுத்துவதாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கம், சந்தானத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
மேலும், அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் சந்தானம் நடித்த ஏ1 திரைப்படத்தில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால், அதற்கு தேவையில்லாத விளம்பரம் தேடி கொடுத்திடக் கூடாது என்று சகித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால், இந்த திரைப்பட நிகழ்ச்சியில் சந்தானம் பேசும் போது, அந்த ஆட்சேபகரமான காட்சிகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார். இது பிராமண சமூகத்தினரின் உணர்வுகளை மேலும் புண்படுத்தியுள்ளது. இதற்காக, சந்தானத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்த திரைப்படத்தை பிராமண சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டும். மேலும், மற்ற சமூகத்தினரும் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிராமணர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசிர்வாதத்திடம் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதில், பிராமணர்களை இழிவுபடுத்திய சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். மேலும், ஆளுநர், முதலமைச்சர், டிஜிபி ஆகியோருக்கும் புகார் அனுப்பியுள்ளார்.
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்