ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நா., சபையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து பிரியங்கா சோப்ராவை விலக்க வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் ஐ.நா.,வுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ராவை கடந்த 2016ம் ஆண்டு யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக ஐ.நா., நியமனம் செய்தது.
இந்நிலையில், தற்போது, பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைய அமைச்சர் ஷெரின் மசாரி, பிரியங்கா சோப்ராவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஐ.நா.,விற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் பிரியங்கா சோப்ரா, இந்தியா சார்பாக செயல்படுவதாகவும், புல்வாமா தாக்குதல் மற்றும் சமீபத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஒரு தலை பட்சமாக இந்தியா பக்கமே நின்று பிரியங்கா குரல் கொடுத்தார் என குற்றம்சாட்டியுள்ளார்.
இவரது இந்த குற்றச்சாட்டு குறித்து ஐ.நா., என்ன மாதிரியான முடிவை எடுக்க உள்ளது என்பது விரைவில் தெரிந்துவிடும்.